Enter your Email Address to subscribe to our newsletters

புதுடெல்லி, 06 மே (ஹி.ச.)
தெற்கு டெல்லியின் பட்டி மைன்ஸ் அருகே உள்ள காட்டுப் பகுதியில் 14 வயது மாணவர் ஒருவர் கழுத்து நெரித்துக் கொலை செய்யப்பட்ட நிலையில் இன்று சடலமாக மீட்கப்பட்டதாக டெல்லி காவல்துறை தெரிவித்துள்ளது.
உயிரிழந்தவர் 9-ஆம் வகுப்பு படித்து வந்த மாணவர் என்பது போலீசார் விசாரணையில் தெரிய வந்துள்ளது.
பட்டி மைன்ஸ் காட்டுப் பகுதி தெற்கு டெல்லியில் அமைந்துள்ள தனிமையான, பாதுகாப்பு குறைந்த பகுதியாகும்.
இதற்கு முன்பும் இந்த பகுதியில் கொலை சம்பவங்கள் பதிவாகியுள்ளன. இளைஞர்கள் சம்பந்தப்பட்ட குற்றங்கள் இங்கு அடிக்கடி நடப்பதாக காவல்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இந்த நிலையில் இன்று காலை வனத்துறை காவலர்கள் அளித்த புகாரின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார், அடர்ந்த காட்டுப் பகுதியில் மாணவரின் உடலைக் கைப்பற்றினர்.
முதற்கட்ட விசாரணையில், சிறுவன் கழுத்து நெரித்துக் கொல்லப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது. உடலைக் கைப்பற்றிய போலீசார், மரணத்திற்கான உண்மையான காரணத்தை அறிய பிரேத பரிசோதனைக்கு அனுப்பியுள்ளனர்.
சம்பவ இடத்தை தடயவியல் நிபுணர்கள் குழு ஆய்வு செய்து வருகிறது. கொலைக்கான காரணம், குற்றவாளிகள் யார் என்பது குறித்து தற்போது எந்த தகவலும் வெளியிடப்படவில்லை.
இந்த வழக்கில் கொலை வழக்கு பதிவு செய்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
தலைநகரில் பள்ளி மாணவர்கள் குறிவைக்கப்படும் சம்பவங்கள் தொடர்வது பெற்றோரிடையே கடும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. குழந்தைகள் பாதுகாப்பை உறுதி செய்ய ரோந்து பணிகளை அதிகரிக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பிரேத பரிசோதனை அறிக்கை வந்த பிறகே கொலைக்கான முழு பின்னணி தெரியவரும் என போலீசார் தெரிவித்தனர்.
தற்போது தனிப்படை அமைத்து சந்தேக நபர்களிடம் விசாரணை நடந்து வருகிறது.
Hindusthan Samachar / vidya.b