Enter your Email Address to subscribe to our newsletters

தமிழ்நாடு, 07 மே (ஹி.ச.)
மதுரை, தேனி, திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களில் பதிவு செய்யப்பட்ட பல்வேறு போதை பொருள் தடுப்பு சட்டத்தின் கீழ் தண்டனை பெற்றவர்கள், தங்களது தண்டனையை இடைநிறுத்தி ஜாமீனில் விடுவிக்க கோரி தனித்தனியாக ஐகோர்ட் மதுரை கிளையில் மனுக்கள் தாக்கல் செய்திருந்தனர்.
இந்த வழக்குகள் அனைத்தையும் ஒரே வழக்காக விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
இந்த வழக்குகளை நீதிபதி புகழேந்தி விசாரித்தார்.
அரசு தரப்பில் கூடுதல் குற்றவியல் வழக்கறிஞர் செந்தில்குமார் ஆஜராகி
தண்டனை நிறுத்தி வைக்க கூடாது விசாரணை நீதிமன்றம் விதித்த தண்டனையை உறுதிப்படுத்த வேண்டும் என வாதங்களை வைத்திருந்தார்.
பின்னர் நீதிபதி பிறப்பித்த உத்தரவில்,
கடந்த 10 ஆண்டுகளில் மட்டும் மதுரை, தேனி, திண்டுக்கல் ஆகிய 3 மாவட்டங்களில் சுமார் 12 ஆயிரத்திற்கும் மேற்ப்பட்ட கஞ்சா கடத்தல் உள்ளிட்ட போதைபொருள் தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குகள் பதிவாகியுள்ளது. இவை தமிழகத்தில் பதிவாகும் வழக்குகள் 50 சதவீததிற்கும் அதிகமான வழக்குகள் இந்த 3 மாவட்டங்க்களில் மட்டும் பதிவாகுவது கவனிக்கத்தக்கது.
இந்த வழக்குகளில் இருந்து சுமார் 5603 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
இவை ஒழுங்கமைக்கப்பட்ட போதைப்பொருள் கடத்தல் வலையமைப்பைக் காட்டுகிறது.
அப்போதைய தமிழக அரசு போதைப்பொருள் கடத்தல் தொடர்பாக பூஜ்ஜிய சகிப்புத்தன்மை கொள்கையை கடைப்பிடித்து வருவதாகவும், தமிழகத்தில் இருந்து போதைப்பொருட்களை ஒழிக்க அரசு உறுதியுடன் இருப்பதாகவும், போதைப்பொருள் விழிப்புணர்வு கையேடு வெளியீடு, மற்றும் போதைப்பொருட்களைப் பாதுகாப்பாக வைப்பதற்கான 'மல்கானா'க்களை அமைத்தல் போதைப்பொருட்களை அழிப்பதற்கான வழிமுறைகளை உருவாக்குவது குறித்து காவல்துறை தலைமை இயக்குநர் மற்றும் உள்துறை அமைச்சகம் பல்வேறு சுற்றறிக்கைகளை வெளியிட்டுள்ளதாக அரசு தரப்பு வழக்கறிஞர் தெரிவித்துள்ளார்.
அரசின் சிறப்பான நடவடிக்கையை இந்த நீதிமன்றம் பாரட்டுகிறது.
இருந்த போதிலும் தமிழகத்தில் கஞ்சா பயிரிடுவது நிறுத்தப்பட்டாலும், இங்கிருந்த குற்றவாளிகள் தற்போது ஆந்திரா, தெலங்காணா மற்றும் ஒடிசா போன்ற மாநிலங்களில் நிலங்களைக் குத்தகைக்கு எடுத்து கஞ்சா பயிரிட்டு, அங்கிருந்து தமிழகத்திற்கு கடத்தி வருவது தெரியவந்துள்ளது.
போதைப்பொருள் ஒழிப்புக்காக உருவாக்கப்பட்ட சிறப்புப் பிரிவான போதைப்பொருள் தடுப்பு பிரிவை விட, உள்ளூர் போலீசாரே போதைபொருள் நடமாட்டம் தொடர்பாக அதிக வழக்குகளைப் பதிவு செய்கின்றனர். போதைப்பொருள் தடுப்பு பிரிவுக்கு தமிழகம் முழுவதும் 12 டிஎஸ்பிக்கள், 16 ஆய்வாளர்கள் என மிகக் குறைந்த எண்ணிக்கையிலான அதிகாரிகளே உள்ளனர்.
எனவே போதைப்பொருள் தடுப்பு பிரிவில் காலிப் பணியிடங்களை விரைந்து நிரப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், போதைப்பொருள் தடுப்பு பிரிவில் சைபர் கிரைம் செல்களை உருவாக்கி, போதைப்பொருள் கடத்தல்காரர்களின் ஆன்லைன் தொடர்புகளைக் கண்காணிக்க வேண்டும். பேருந்துகள் மற்றும் ரயில்களில் அவ்வப்போது சோதனைகளை நடத்த போதைப்பொருள் தடுப்பு பிரிவுக்கு தமிழ்நாடு சிறப்பு போலீஸ் படை உதவியைப் பயன்படுத்த அனுமதிக்க வேண்டும்.
காவல்துறை வெறும் கைது மற்றும் பறிமுதல் செய்வதோடு நிறுத்திக்கொள்கிறது. போதைப்பொருள் கடத்தலின் பின்னணியில் உள்ள பணப் பரிமாற்றம் மற்றும் சொத்துக்களைக் கண்டறிவதில் போதிய கவனம் செலுத்தப்படுவதில்லை. 2023-24 ஆம் ஆண்டில் 72 வழக்குகளில் மட்டுமே நிதி விசாரணை நடத்தப்பட்டுள்ளது. எனவே இனிவரும் அனைத்து போதை பொருள் தடுப்பு வழக்குகளிலும் குற்றவாளிகளின் சொத்துக்களைக் கண்டறிந்து பறிமுதல் செய்யும் நிதி விசாரணை கட்டாயமாக்கப்பட வேண்டும்.
கிராம நிர்வாக அலுவலர்கள் மூலம் சந்தேகத்திற்குரிய நபர்களின் நடமாட்டத்தைக் கண்காணிக்க வேண்டும். ஆந்திரா, தெலங்காணா போன்ற மாநில அதிகாரிகளுடன் இணைந்து செயல்பட வேண்டும்.
வெறும் கைதுகளால் மட்டும் போதைப்பொருள் நடமாட்டத்தைத் தடுத்துவிட முடியாது, கடத்தல் கும்பலின் பொருளாதார அடித்தளத்தைத் தகர்த்தால் மட்டுமே போதைப்பொருள் இல்லாத சமூகத்தை உருவாக்க முடியும் என தெரிவித்துள்ளது.
Hindusthan Samachar / GOKILA arumugam