Enter your Email Address to subscribe to our newsletters

தூத்துக்குடி , 07 மே (ஹி.ச)
தூத்துக்குடி மாவட்டம் மற்றும் ஓட்டப்பிடாரம் வட்டம், பாஞ்சாலங்குறிச்சி கிராமத்தில் 08.05.2026 மற்றும் 09.05.2026 அன்று ஸ்ரீவீரசக்க தேவி உற்சவ விழா நடைபெறவுள்ளது.
மேற்படி நாளில் அசம்பாவிதங்கள் ஏதுமின்றி அமைதியாக நடைபெறும் பொருட்டு, சட்டம் மற்றும் ஒழுங்கினை பராமரித்திட 07.05.2026 மாலை 06.00 மணி முதல் 10.05.2026 காலை 06.00 மணி வரை பாரதிய நாகரிக் சுரக்ஷா சன்ஹிதா (BNSS) - 2023, பிரிவு 163 (1) -ன் கீழ் தூத்துக்குடி மாவட்டம் முழுவதற்கும் தடை உத்தரவு பிறப்பித்து ஆட்சியர் விஷு மகாஜன் உத்தரவிட்டுள்ளார்.
அதன்படி பொதுக் கூட்டம் நடத்துவதற்கும், ஐந்து மற்றும் அதற்கு மேற்பட்ட நபர்கள் கூடுவதற்கும், ஊர்வலம் செல்வதற்கும், அன்னதானம் வழங்குவதற்கும், கலந்து கொள்ளும் பொதுமக்கள் அனைவரும் வாள், சுருள் கத்தி, கம்பு, வேல்கம்பு, குச்சி, கற்கள் மற்றும் இதர அபாயகரமான ஆட்சேபகரமான ஆயுதங்கள் கொண்டு வருவதற்கும், தூத்துக்குடி மாவட்டம் மற்றும் வெளி மாவட்டங்களிலிருந்து அனைத்து வகை வாடகை வாகனங்கள் மூலமாகவும் திருவிழாவிற்கு கலந்து கொள்ள அழைத்து வரப்படுவதற்கும் பாரதிய நாகரிக் சுரக்ஷா சன்ஹிதா (BNSS) - 2023, பிரிவு 163 (1) -ன் கீழ் தடை விதிக்கப்பட்டுள்ளது.
இத்தடை உத்தரவிலிருந்து பள்ளி மற்றும் கல்லூரி வாகனங்கள், தினசரி வாகனங்கள், அத்தியாவசிய பொருட்கள் கொண்டு செல்லும் வாகனங்கள், சுற்றுலாவிற்காக வரும் வாகனங்கள், சரக்கு வாகனங்கள் தினசரி செல்லும் ஆம்னி பேருந்துகள் ஆகியவற்றிற்கு விதிவிலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
மேற்படி நாட்களில் வேறு ஏதேனும் கூட்டங்கள், அன்னதானம் மற்றும் ஊர்வலங்கள் நடத்தவிருப்பின் தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களை அணுகி அனுமதி பெற்றுக் கொள்ளவும் கேட்டுக்கொள்ளப்படுகிறது என மாவட்ட ஆட்சியர் விஷு மகாஜன், தெரிவித்துள்ளார்.
Hindusthan Samachar / vidya.b