கான்பூரில் ரூ.146 கோடி நிதி மோசடி செய்த கும்பல் தலைவன் கைது
கான்பூர், 08 மே (ஹி.ச.) உத்தரப் பிரதேச மாநிலம் கான்பூரில் கூலித் தொழிலாளர்களின் பான் கார்டுகளை பயன்படுத்தி போலி நிறுவனங்களை உருவாக்கிய, மர்ம கும்பல் ஒன்று சட்டவிரோத பணப் பரிவர்த்தனைகளில் ஈடுபட்டு வந்ததாக புகார்கள் எழுந்தன. இது குறித்து சகேரி
₹146 Crore Financial Fraud Arrested


கான்பூர், 08 மே (ஹி.ச.)

உத்தரப் பிரதேச மாநிலம் கான்பூரில் கூலித் தொழிலாளர்களின் பான் கார்டுகளை பயன்படுத்தி போலி நிறுவனங்களை உருவாக்கிய, மர்ம கும்பல் ஒன்று சட்டவிரோத பணப் பரிவர்த்தனைகளில் ஈடுபட்டு வந்ததாக புகார்கள் எழுந்தன.

இது குறித்து சகேரி போலீசார், சைபர் செல் மற்றும் கண்காணிப்புப் பிரிவு இணைந்து மேற்கொண்ட விசாரணையில் ரூ.146 கோடி அளவிலான பெரும் நிதி மோசடி அம்பலமாகியுள்ளது.

இந்த மோசடி கும்பலின் தலைவனாக செயல்பட்ட ‘பப்பு சூரி’ என்ற மஹ்பூஸ் அலியை கான்பூர் நகர் ஆணையரக போலீசார் கான்பூரின் ஜாஜ்மவு பகுதியில் இன்று கைது செய்தனர்.

போலீசாரின் தகவலின்படி, மஹ்பூஸ் அலி தனது குடும்ப உறுப்பினர்களின் பெயரில் சுமார் 68 வங்கிக் கணக்குகளை தொடங்கியுள்ளார். ‘அஃபிசா எண்டர்பிரைசஸ்’ என்ற ஒரே நிறுவனத்தின் மூலம் இந்த கணக்குகள் வழியாக ரூ.146 கோடி பணம் கைமாற்றப்பட்டுள்ளது. இந்த நிதி, பழைய இரும்பு வியாபாரம் மற்றும் இறைச்சிக் கூட வர்த்தகத்தில் இருந்து பெறப்பட்டது என விசாரணையில் தெரியவந்துள்ளது.

மஹ்பூஸ் அலி அந்த பணத்தை எடுத்து, கமிஷன் பெற்றுக்கொண்டு ரொக்கமாக மீண்டும் அசல் நிறுவனங்களுக்கே திருப்பி அனுப்பியதாக கூறப்படுகிறது.

மேலும் நடத்தப்பட்ட விசாரணையில், ஃபிரோஸ் கான் என்ற வழக்கறிஞரே இந்த மோசடி கும்பலின் உண்மையான சூத்திரதாரி என தெரியவந்துள்ளது.

அவர் போலி ஜிஎஸ்டி பதிவு பெற்ற நிறுவனங்களை உருவாக்க உதவியதாக போலீசார் விசாரணையில் தெரிய வந்துள்ளது. மஹ்பூஸ் அலி மீது ஏற்கனவே 6 குற்ற வழக்குகள் உள்ள நிலையில், ஃபிரோஸ் கான் உள்ளிட்ட கூட்டாளிகளை போலீசார் தேடி வருகின்றனர்.

இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய போலீஸ் ஆணையர் ரகுபிர் லால் கூறுகையில்,

பழைய இரும்பு வியாபாரிகளும், இறைச்சிக் கூடத் தொழிலில் ஈடுபட்டவர்களும் பணத்தை சுழற்சி செய்வதில் ஈடுபட்டு ள்ளனர். இதில் ஜிஎஸ்டி ஏய்ப்பு, போலி நிறுவனங்கள், வருமான வரி மோசடி மற்றும் ஹவாலா பரிவர்த்தனைகள் அடங்கும். பல போலி நிறுவனங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன.

தாஹிர், அஜ்மேரி, ருஸ்தம் மற்றும் அவர்களின் கூட்டாளிகள் பயனாளிகளாக பெயரிடப்பட்டுள்ளனர். அவர்களுக்கும் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. விசாரணை தொடர்கிறது. ஏற்கனவே 5 பேர் சிறைக்கு அனுப்பப்பட்டுள்ளனர்.

பரிவர்த்தனைகள் மற்றும் பயனாளிகளை சரிபார்க்கும் பணியில் விசாரணை தொடர்கிறது. பிப்ரவரி 1-ம் தேதி நடந்த ஒரு கொள்ளை வழக்கில், சட்டவிரோத ரொக்கப் பரிவர்த்தனைகளுடன் தொடர்பு இருப்பது தெரியவந்தது.

5 குற்றவாளிகள் கைது செய்யப்பட்டு, ரூ.11 லட்சம் மீட்கப்பட்டது. மோசடியாக கணக்குகள் தொடங்கப்பட்டு, போலி ஜிஎஸ்டி பதிவுகள் செய்யப்பட்டுள்ளன. 68 கணக்குகள் கண்டறியப்பட்டுள்ளன.

இந்த மோசடி வலை பஞ்சாப், இமாச்சலப் பிரதேசம், டெல்லி, மேற்கு வங்கம் மற்றும் உத்தரப் பிரதேசம் வரை பரவியுள்ளது. ஜிஎஸ்டி மற்றும் வருமான வரித்துறை அதிகாரிகள் உதவி வருகின்றனர். பல வங்கிகளில் பரிவர்த்தனைகள் நடந்துள்ளன.

இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

Hindusthan Samachar / vidya.b