Enter your Email Address to subscribe to our newsletters

திருப்பூர், 08 மே (ஹி.ச)
திருப்பூர் மாவட்டம், உடுமலைப்பேட்டை அருகே அமைந்துள்ள பிரசித்தி பெற்ற சுற்றுலாத் தலமான பஞ்சலிங்க அருவிக்கு கோடை விடுமுறையை முன்னிட்டு சுற்றுலாப் பயணிகள் வருகை அதிகரித்திருந்தது.
கடந்த 2 நாட்களாக திருமூர்த்தி மலை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பெய்து வரும் கனமழை காரணமாக, பஞ்சலிங்க அருவிக்கு நீர்வரத்து வழக்கத்தை விட பல மடங்கு அதிகரித்துள்ளது.
மலைப்பகுதியில் பெய்த மழைநீர் அருவியில் ஆர்ப்பரித்து கொட்டுவதால், நீரோட்டத்தின் வேகமும் அதிகரித்துக் காணப்படுகிறது.
சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்பு கருதி, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அருவியில் குளிக்க தற்காலிக தடை விதிக்கப்படுவதாக வனத்துறையினர் தெரிவித்தனர்.
அருவிப் பகுதியில் வனக்காவலர்கள் கண்காணிப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். தடையை மீறி குளிப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தற்போது அருவியை தூரத்தில் இருந்து மட்டுமே பார்வையிட அனுமதிக்கப்படுவதாக அதிகாரிகள் கூறினர். நீர்வரத்து சீரான பிறகு, பாதுகாப்பு நிலவரம் ஆய்வு செய்யப்பட்டு மறு அறிவிப்பு வெளியிடப்படும். எனவே, சுற்றுலாப் பயணிகள் வனத்துறையினரின் அறிவுறுத்தலுக்கு ஒத்துழைக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
கோடை விடுமுறையை முன்னிட்டு திருமூர்த்தி அணை மற்றும் பஞ்சலிங்க அருவி பகுதிகளுக்கு முகாமிட்ட சுற்றுலாப் பயணிகள் திடீர் தடையால் ஏமாற்றம் அடைந்தனர்.
Hindusthan Samachar / vidya.b