மும்மொழி கொள்கையை ஏற்க மாட்டோம் - முன்னாள் கல்வி அமைச்சர் அன்பில் மகேஷ்
திருச்சி, 08 மே (ஹி.ச.) திருச்சி தென்னூரில் உள்ள இல்லத்தில் முன்னாள் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில், +2 பொதுத்தேர்வில் கடந்த ஆண்டு காட்டிலும் இந்த ஆண்டு 0.17 ச
மும்மொழி கொள்கையை ஏற்க மாட்டோம் - முன்னாள் கல்வி அமைச்சர் அன்பில் மகேஷ்


திருச்சி, 08 மே (ஹி.ச.)

திருச்சி தென்னூரில் உள்ள இல்லத்தில் முன்னாள் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி இன்று செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது அவர் பேசுகையில்,

+2 பொதுத்தேர்வில் கடந்த ஆண்டு காட்டிலும் இந்த ஆண்டு 0.17 சதவீதம் தேர்ச்சி அதிகரித்துள்ளது. தேர்ச்சி பெற்ற மாணாக்கர்களுக்கு வாழ்த்துக்களையும், கூடுதலான தேர்ச்சிக்கு உழைத்த ஆசிரியர் பெருமக்களுக்கு பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கின்றேன்.

இந்த தேர்ச்சி விகிதத்தை தலைவர் ஸ்டாலின் அவரிடம் தெரிவித்தபோது அவர் மிகுந்த மகிழ்ச்சி அடைந்தார். திருச்சி மாவட்டம் முதல் 5 இடங்களுக்குள் வந்தது மகிழ்ச்சி அளிக்கிறது.

அதேபோல அரசு பள்ளிகள் தேர்ச்சி விதத்தில் முதல் 3வது இடத்தை பெற்றது இன்னும் மகிழ்ச்சி அளிப்பதாக உள்ளது, பல்வேறு பாடங்களில் 16 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் 100 மதிப்பெண்கள் பெற்றுள்ளனர். தமிழில் மட்டும் 83 பேர் நூற்றுக்கு நூறு பெற்றுள்ளனர்.

வழக்கம்போல மாணவர்களை காட்டிலும் மாணவிகளே அதிகளவு தேர்ச்சி பெற்றது மகிழ்ச்சி அளிப்பதாக இருந்தாலும், வரும் காலங்களில் மாணவர்களும் தேர்ச்சிபெறுவார்கள் என்ற நம்பிக்கை இருக்கிறது. ஆசிரியர் மற்றும் ஆசிரியர் அல்லாத அனைவருக்கும் நன்றியினை தெரிவித்துக் கொள்கின்றேன்.

கடந்த ஆறு மாதங்களாக திட்டமிட்டு ஆசிரியர்கள் அனைவரும் பணியாற்றியதால் தான் இந்த தேர்ச்சியை தர முடிந்தது, ரிசல்ட் என்பது வாழ்க்கை அல்ல, நாம் நம்மை அறிந்து கொள்வதற்கும் என்ன தெரிந்துகொண்டோம் என்பதற்கான ஒரு தேர்வு தான், தேர்ச்சி பெற இயலாதவர்கள் துணைத் தேர்வில் மனம் தளராமல் மீண்டும் தேர்வு எழுதி வெற்றி பெற வேண்டும்.

பிஎம் ஸ்ரீ எதனால் நாங்கள் வேண்டாம் என்பதனை பல நேரங்களில் விளக்கி சொல்லி இருக்கிறோம், அதில் உள்ள சிக்கல்களையும் மதயானை என்ற புத்தகத்தின் வாயிலாகவும் அடுக்கடுக்காக தெரிவித்துள்ளோம். அரசியல் பார்க்காமல் இதனை எதிர்க்கிறோம். இருமொழிக் கொள்கையே போதுமானது. மும்மொழி கொள்கையை ஏற்க மாட்டோம் என இருந்தோம்.

என்னவெல்லாம் சொல்லி அவர்கள் உங்களை மிரட்டினாலும் புதிதாக ஆட்சிக்கு வரக்கூடிய யாராக இருந்தாலும் அதற்கு பயந்து விடக்கூடாது, நீங்கள் எடுக்கக்கூடிய முடிவுக்கு ஒட்டுமொத்தமாக தமிழகமே உங்களுக்கு பின்னால் இருக்கும். தமிழகத்தின் நலன் சார்ந்து கட்சி பேதமின்றி ஓரணியில் நாங்கள் நிற்போம் என்ற உத்தரவாதத்தை அளிக்கிறோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

Hindusthan Samachar / vidya.b