மதுரையில் இரண்டாவது நாளாக கனமழை - பெரியார் பேருந்து நிலையம், ரயில் நிலையம் சுற்றுவட்டார பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கி பொதுமக்கள் அவதி
மதுரை, 08 மே (ஹி.ச.) தமிழகத்தில் கடந்த இரண்டு நாட்களாக இடியுடன் கூடிய கனமழை பெய்து வரும் நிலையில், மதுரை மாநகரின் மத்திய பகுதிகளில் தண்ணீர் தேக்கம் கடுமையாக அதிகரித்து பொதுமக்கள் மற்றும் ரயில் பயணிகள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர். மதுரை ப
மழை


மதுரை, 08 மே (ஹி.ச.)

தமிழகத்தில் கடந்த இரண்டு நாட்களாக இடியுடன் கூடிய கனமழை பெய்து வரும் நிலையில், மதுரை மாநகரின் மத்திய பகுதிகளில் தண்ணீர் தேக்கம் கடுமையாக அதிகரித்து பொதுமக்கள் மற்றும் ரயில் பயணிகள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர்.

மதுரை பெரியார் பேருந்து நிலையம், பாண்டி பஜார், ரயில் நிலையம் நோக்கிச் செல்லும் பிரதான சாலைகள் உள்ளிட்ட தாழ்வான பகுதிகளில் நேற்று இரவு பெய்த கனமழையால் மூன்று அடிக்கும் அதிகமாக மழைநீர் தேங்கியுள்ளது.

இதன் காரணமாக காலை நேரத்தில் கல்லூரி மற்றும் அலுவலகங்களுக்கு செல்லும் மாணவர்கள், பணியாளர்கள் கடும் அவதியடைந்தனர். மேலும் ராமேஸ்வரம், சென்னை, திருச்சி உள்ளிட்ட பகுதிகளில் இருந்து ரயில் மூலம் மதுரைக்கு வந்த பயணிகளும் தண்ணீரில் தத்தளித்தபடியே பயணம் மேற்கொள்ள வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது.

பெரியார் பேருந்து நிலையம் நோக்கிச் செல்லும் சாலைகளில் முழங்கால் அளவிற்கு மேலாக தண்ணீர் தேங்கியதால், ரயில் நிலையத்திற்குள் செல்லவே பயணிகள் பெரும் சிரமத்தை சந்தித்தனர்.

பலர் தங்களது உடைமைகளை தூக்கிக்கொண்டு தண்ணீரை கடந்து செல்லும் நிலை காணப்பட்டது.

அதேபோல் திருப்பரங்குன்றம் சாலை பகுதியில் உள்ள வசந்த நகர் உள்ளிட்ட இடங்களிலும் மழைநீர் அதிக அளவில் தேங்கியதால், கல்லூரி பேருந்துகள் மற்றும் அலுவலக வாகனங்கள் தட்டு தடுமாறி சென்றன. சில இடங்களில் போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டது.

மதுரை மாநகரில் இரண்டாவது நாளாக பெய்து வரும் கனமழையால் பெரியார் பேருந்து நிலையம் மற்றும் ரயில் நிலைய பகுதிகள் தெப்பம் போல காட்சியளிப்பதாக பொதுமக்கள் தெரிவித்தனர்.

மழைநீரை உடனடியாக அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என ரயில் பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Hindusthan Samachar / GOKILA arumugam