கேரளாவுக்கு செல்லும் கனிம வள வாகனங்கள் திடீர் நிறுத்தம் - தென்காசி மாவட்ட நிர்வாகத்தின் அதிரடி நடவடிக்கை
கேரளா, 08 மே (ஹி.ச.) தமிழக - கேரள எல்லையான தென்காசி மாவட்டம் புளியரை வழியாக தினமும் 500-க்கும் மேற்பட்ட கனரக வாகனங்களில் கனிம வளங்கள் கேரள மாநிலத்திற்கு கொண்டு செல்லப்பட்டு வந்தன. இந்த நிலையில், கன்னியாகுமரி மாவட்டம் வழியாக கனிம வள வாகனங்கள் செல
வாகனங்கள் நிறுத்தம்


கேரளா, 08 மே (ஹி.ச.)

தமிழக - கேரள எல்லையான தென்காசி மாவட்டம் புளியரை வழியாக தினமும் 500-க்கும் மேற்பட்ட கனரக வாகனங்களில் கனிம வளங்கள் கேரள மாநிலத்திற்கு கொண்டு செல்லப்பட்டு வந்தன.

இந்த நிலையில், கன்னியாகுமரி மாவட்டம் வழியாக கனிம வள வாகனங்கள் செல்ல மாவட்ட நிர்வாகம் தடை விதித்ததைத் தொடர்ந்து, அந்த வாகனங்களும் புளியரை சாலையை பயன்படுத்தத் தொடங்கின.

இதன் காரணமாக விருதுநகர், தென்காசி, திருநெல்வேலி உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து தினமும் 800-க்கும் மேற்பட்ட கனரக வாகனங்களில் சுமார் 37 ஆயிரம் டன் கனிம வளங்கள் கேரளாவிற்கு கொண்டு செல்லப்பட்டதாக கூறப்படுகிறது.

இதனால் புளியரை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் கடும் போக்குவரத்து நெரிசலும், விபத்து அபாயமும் அதிகரித்தது.

இந்த சூழலில் பல்வேறு சமூக நல அமைப்புகள் மற்றும் பொதுமக்கள் போராட்டம் நடத்த அறிவிப்பு வெளியிட்டனர்.

இதையடுத்து தென்காசி மாவட்ட ஆட்சித்தலைவர் கமல் கிஷோர் தலைமையில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உள்ளிட்ட பல்வேறு துறை அதிகாரிகள் பங்கேற்ற ஆலோசனை கூட்டம் கடந்த 7-ஆம் தேதி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது.

அக்கூட்டத்தில், கேரள மாநிலத்திற்கு கனிம வளங்கள் ஏற்றி செல்லும் வாகனங்களுக்கு மறு உத்தரவு வரும் வரை தற்காலிகமாக அனுமதி நிறுத்தி வைக்க முடிவு செய்யப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதன் தொடர்ச்சியாக இன்று முதல் கனிம வள வாகனங்கள் கேரளாவிற்கு செல்ல அனுமதி மறுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

மேலும் அனைத்து குவாரிகள் மற்றும் கிரஷர்களிலும் கனிம வளங்கள் ஏற்றி அனுப்ப வேண்டாம் என வாய்மொழி உத்தரவும் வழங்கப்பட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கிறது.

மாவட்ட நிர்வாகத்தின் இந்த அதிரடி நடவடிக்கை பொதுமக்கள் மத்தியில் வரவேற்பையும் மகிழ்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

Hindusthan Samachar / GOKILA arumugam