வீரபாண்டிய கட்டபொம்மன் விழா - தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் விஷு மகாஜன் பங்கேற்பு
தூத்துக்குடி, 08 மே (ஹி.ச.) தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் வட்டம் பாஞ்சாலங்குறிச்சியில் அமைந்துள்ள சுதந்திரப் போராட்ட வீரர் வீரபாண்டிய கட்டபொம்மனின் நினைவு கோட்டையில் ஒவ்வொரு ஆண்டும் சித்திரை மாதம் கடைசி வெள்ளிக்கிழமை வீரபாண்டிய கட்டபொம்ம
Veerapandiya Kattabomman Festival


தூத்துக்குடி, 08 மே (ஹி.ச.)

தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் வட்டம் பாஞ்சாலங்குறிச்சியில் அமைந்துள்ள சுதந்திரப் போராட்ட வீரர் வீரபாண்டிய கட்டபொம்மனின் நினைவு கோட்டையில் ஒவ்வொரு ஆண்டும் சித்திரை மாதம் கடைசி வெள்ளிக்கிழமை வீரபாண்டிய கட்டபொம்மன் பிறந்தநாள் விழாவாகவும், வீரசக்கதேவி ஆலய திருவிழாவாகவும் கொண்டாடப்பட்டு வருகிறது.

அதன்படி இன்று நடைபெற்ற பாஞ்சாலங்குறிச்சி வீரசக்கதேவி ஆலய ஆண்டு விழாவை முன்னிட்டு, பல்வேறு இடங்களில் இருந்து பாஞ்சாலங்குறிச்சிக்கு தொடர் ஜோதி ஓட்டம் நடைபெற்றது.

ஜோதி ஓட்டத்துக்கு போலீஸார் கடுமையான கட்டுப்பாடுகளை விதித்தனர். ஜோதிக்கு பின்னால் வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டதை கண்டித்து விழாவை நிறுத்துவதாக விழாக் குழுவினர் அறிவித்தனர்.

கயத்தாரில் மாவீரன் வீரபாண்டிய கட்டபொம்மன் தூக்கிலிடப்பட்ட நினைவிடத்தில் இருந்து இந்த ஜோதி ஓட்டம் தொடங்கியது. இதில் பாஞ்சாலங்குறிச்சியைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான இளைஞர்கள் மற்றும் பொதுமக்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர்.

இந்த ஜோதி ஓட்டமானது கயத்தார் மணிமண்டபத்தில் தொடங்கி மதுரை மெயின் ரோடு, பசுவந்தனை, கடம்பூர் மற்றும் கீழமங்கலம் வழியாக சுமார் 20 கிலோமீட்டர் கடந்து பாஞ்சாலங்குறிச்சியை அடைந்தது. நூற்றுக்கும் மேற்பட்ட இருசக்கர வாகனங்கள், கார்கள், வேன்கள் மற்றும் லாரிகள் அணிவகுத்துச் சென்றன. இதற்கான ஏற்பாடுகளை வீரசக்கதேவி ஆலய விழா கமிட்டியினர் செய்திருந்தனர்.

இந்த நிலையில், இன்று கட்டபொம்மன் விழாவினை முன்னிட்டு தமிழ்நாடு அரசின் சார்பில் அன்னாரது திரு உருவச் சிலைக்கு தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் விஷு மகாஜன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

விழாவில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சி.மதன் மற்றும் அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.

Hindusthan Samachar / vidya.b