Enter your Email Address to subscribe to our newsletters

கோவை, 08 மே (ஹி.ச.)
கோவை மாவட்டம் பூண்டி அருகே உள்ள வெள்ளியங்கிரி மலையின் உச்சியில் வெள்ளியங்கிரி ஆண்டவர் சுயம்பு லிங்கமாகக் காட்சி தரும் இடத்தை அடைய ஏழு மலைகளைக் கடந்து செல்ல வேண்டும்.
வெள்ளியங்கிரி மலைக்கு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்தும், வெளி மாநிலங்களிலிருந்தும் ஏராளமான பக்தர்கள் வருகை தருகின்றனர்.
கோவை மாவட்டத்தின் புகழ்பெற்ற ஆன்மிக சுற்றுலாத் தலமான வெள்ளியங்கிரி மலைக்கு பிப்ரவரி மாதம் முதல் பக்தர்களுக்கு அனுமதி அளிக்கப்பட்ட நிலையில், தற்போது கோடை விடுமுறை காலம் என்பதால் பக்தர்களின் கூட்டம் அதிகரித்துள்ளது. மலையேறும் பக்தர்களுக்கு வனத்துறை சார்பில் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில், இன்று வெள்ளியங்கிரி மலை ஏறிய டாக்சி ஓட்டுநர் ஒருவர் மயங்கி விழுந்து உயிரிழந்த துயரம் நிகழ்ந்துள்ளது.
கோவை மதுக்கரை பகுதியைச் சேர்ந்த மயில்சாமி (32) என்பவர் இன்று அதிகாலை, வெள்ளியங்கிரியில் உள்ள நான்காவது மலைப்பாதையில் செல்லும் போது உயிரிழந்தார்.
அவருக்கு ஏற்கனவே இதயபாதிப்பு இருந்ததும், குடும்பத்தினர் எச்சரிக்கையை மீறி மலையேறியதும் தற்போது தெரியவந்துள்ளது.
கடுமையான மூச்சுத்திணறல் ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே மயங்கி விழுந்த அவரை, உடன் சென்ற பக்தர்கள் மீட்டு முதலுதவி அளித்தனர்.
தகவல் அறிந்து விரைந்து வந்த வனத்துறையினர் மற்றும் மீட்புக்குழுவினர், அவரை மலை அடிவாரத்திற்கு கொண்டு வர முயற்சித்தனர்.
எனினும், சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக உயிரிழந்தார். அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
வெள்ளியங்கிரி மலை 6,000 அடி உயரம் கொண்ட கடினமான மலைப்பாதையாகும். ஏழு மலைகளைக் கடந்து செல்ல வேண்டிய இந்த பாதையில், குறிப்பாக நான்காவது மலை மிகவும் செங்குத்தானது.
ஆக்ஸிஜன் அளவு குறைவாக இருப்பதால், உடல் தகுதி இல்லாதவர்கள், இதய நோயாளிகள் மற்றும் மூச்சுத்திணறல் பிரச்சனை உள்ளவர்கள் மலையேறுவதை தவிர்க்குமாறு வனத்துறையினர் தொடர்ந்து அறிவுறுத்தி வருகின்றனர்.
இந்த சம்பவம் குறித்து ஆலந்துறை காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கோடை காலத்தில் பக்தர்கள் கூட்டம் அதிகரித்துள்ள நிலையில், உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுடன் மலையேறுமாறு அதிகாரிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
Hindusthan Samachar / vidya.b