அவிநாசி அருகே கேரள கழிவுகளை கொட்ட முயன்ற லாரி சிறைபிடிப்பு- 7 டன் குப்பையுடன் போலீசாரிடம் ஒப்படைத்த பொதுமக்கள்
திருப்பூர், 13 ஜூன் (ஹி.ச.) திருப்பூர் மாவட்டம் அவிநாசி அருகே கேரள மாநிலத்திலிருந்து சுமார் 7 டன் குப்பைக் கழிவுகளை ஏற்றி வந்து ஆள் நடமாட்டம் இல்லாத பகுதியில் கொட்ட முயன்ற லாரியை பொதுமக்கள் சிறைபிடித்து போலீசாரிடம் ஒப்படைத்த சம்பவம் பரபரப்பை ஏற்பட
சிறைப்பிடிப்பு


திருப்பூர், 13 ஜூன் (ஹி.ச.)

திருப்பூர் மாவட்டம் அவிநாசி அருகே கேரள மாநிலத்திலிருந்து சுமார் 7 டன் குப்பைக் கழிவுகளை ஏற்றி வந்து ஆள் நடமாட்டம் இல்லாத பகுதியில் கொட்ட முயன்ற லாரியை பொதுமக்கள் சிறைபிடித்து போலீசாரிடம் ஒப்படைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அவிநாசி அடுத்த தெக்கலூர் ஊராட்சிக்கு உட்பட்ட ஏரிப்பாளையம் பகுதியில் பழமையான கௌசிக நதியின் நீர்வழிப் பாதையாக விளங்கும் ஏரி அமைந்துள்ளது. தற்போது வறட்சி காரணமாக ஏரியில் நீர் இல்லாத நிலையில், அப்பகுதியில் அவ்வப்போது குப்பைகள் கொட்டப்படுவதாக பொதுமக்கள் குற்றம்சாட்டி வந்தனர்.

இந்நிலையில், இன்று காலை ஈச்சர் லாரி ஒன்று, கேரள மாநிலம் பெரும்பாவூரில் உள்ள J.K. டிரேடர்ஸ் நிறுவனத்திலிருந்து மூட்டை மூட்டையாக கழிவுகளை ஏற்றி ஏரிப்பாளையம் பகுதிக்குள் சென்றதை பொதுமக்கள் கவனித்தனர். சந்தேகமடைந்த அவர்கள் லாரியை பின்தொடர்ந்து சென்றபோது, ஏரியின் நடுப்பகுதியில் உள்ள பள்ளத்தில் கழிவுகளை கொட்டுவதற்காக லாரி நிறுத்தப்பட்டிருந்தது தெரியவந்தது.

இதையடுத்து பொதுமக்கள் லாரியையும் ஓட்டுநரையும் பிடித்து நிறுத்தி, தகவல் அளித்ததன் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த அவிநாசி போலீசார், தெக்கலூர் கிராம நிர்வாக அலுவலர் மற்றும் ஊராட்சி அலுவலக ஊழியர்கள் முன்னிலையில் லாரியை பொறுப்பேற்றனர்.

போலீசார் மேற்கொண்ட முதற்கட்ட விசாரணையில், சென்னை பகுதியைச் சேர்ந்த பிரகாஷ் என்பவருக்கு சொந்தமான ஈச்சர் லாரியை திருவாரூர் மாவட்டத்தைச் சேர்ந்த செல்வகுமார் (44) ஓட்டி வந்தது தெரியவந்தது.

சென்னை முதல் கேரளா வரை பேட்டரி சரக்குகளை கொண்டு சென்ற பின்னர், பெரும்பாவூரில் உள்ள J.K. டிரேடர்ஸ் நிறுவனத்திலிருந்து பழைய பிளாஸ்டிக் பொருட்கள் எனக் கூறி கழிவுகள் ஏற்றப்பட்டதாகவும், அவற்றை ஈரோடு மாவட்டம் எடப்பாடியில் உள்ள MAN Traders நிறுவனத்திற்கு கொண்டு செல்லுமாறு தெரிவிக்கப்பட்டதாகவும் ஓட்டுநர் கூறியுள்ளார்.

ஆனால் குறிப்பிட்ட நிறுவனம் சரக்கை ஏற்காததால், வாகன உரிமையாளர் அறிவுறுத்தலின் பேரில் ஏதேனும் ஒரு பகுதியில் கழிவுகளை கொட்டி விட்டு செல்ல முடிவு செய்யப்பட்டதாகவும், அதன்படி தெக்கலூர் ஏரிப்பாளையம் பகுதிக்கு வந்ததாகவும் அவர் தெரிவித்ததாக போலீசார் கூறினர்.

சுமார் 7 டன் கழிவு மூட்டைகளுடன் லாரி அவிநாசி காவல் நிலையத்திற்கு கொண்டு செல்லப்பட்டு, கழிவுகளின் தன்மை, அவை எந்த வகையைச் சேர்ந்தவை என்பது குறித்து அதிகாரிகள் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

பொதுமக்களின் விழிப்புணர்வால் சுற்றுச்சூழலுக்கு பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய சம்பவம் தடுக்கப்பட்டுள்ளதாக அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.

Hindusthan Samachar / GOKILA arumugam