Enter your Email Address to subscribe to our newsletters

புதுக்கோட்டை, 13 ஜூன் (ஹி.ச.)
புதுக்கோட்டை மாவட்டம் அரிமளம் அருகே சேத்துமேல் செல்ல அய்யனார் கோவிலில் நடைபெற்ற குதிரை எடுப்பு திருவிழாவை முன்னிட்டு, பாரம்பரிய எல்கை மாட்டு வண்டி பந்தயம் இன்று காலை வெகு விமரிசையாக நடைபெற்றது.
கிராமிய பண்பாட்டின் அடையாளமாக திகழும் இந்த பந்தயத்தைக் காண சுற்றுவட்டார கிராமங்களில் இருந்து ஆயிரக்கணக்கான மக்கள் திரண்டனர்.
விழாவின் முக்கிய நிகழ்வாக நடந்த இந்த எல்கை பந்தயத்தில், பெரிய மாடுகள் மற்றும் சிறிய மாடுகள் என இரண்டு பிரிவுகளாக மாட்டு வண்டிகள் பங்கேற்றன.
காளைகளின் கழுத்தில் கட்டப்பட்ட சலங்கை ஒலியும், வண்டி ஓட்டுநர்களின் உற்சாகக் குரலும், பார்வையாளர்களின் ஆரவாரமும் விழா மைதானம் முழுவதும் எதிரொலித்தது.
விறுவிறுப்பாக நடைபெற்ற போட்டியில், தூசி பறக்க சீறிப்பாய்ந்த காளைகள் காண்போரை மெய்சிலிர்க்க வைத்தன.
பாரம்பரிய முறைப்படி நடத்தப்பட்ட இந்த பந்தயத்தில் வெற்றி பெற்ற மாட்டு வண்டி உரிமையாளர்களுக்கும், சாரதிகளுக்கும் ஊர் முக்கியஸ்தர்கள் பரிசுகளையும், பாராட்டுகளையும் வழங்கி கௌரவித்தனர்.
அய்யனார் கோவில் குதிரை எடுப்பு விழாவின் ஒரு பகுதியாக ஆண்டுதோறும் நடைபெறும் இந்த எல்கை பந்தயம், அப்பகுதி மக்களின் கலாச்சாரத்தையும், வீரத்தையும், கால்நடைகள் மீதான பாசத்தையும் பறைசாற்றும் விதமாக அமைந்தது.
விழாவையொட்டி கோவிலில் சிறப்பு வழிபாடுகளும், அன்னதானமும் நடைபெற்றன.
Hindusthan Samachar / vidya.b