Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 15 ஜூன் (ஹி.ச.)
கவிதாலயா சரவணன் கிரியேசன்ஸ் தயாரிப்பில், இயக்குநர் ராம் தேவ் இயக்கத்தில் இயக்குநரும், நடிகருமான ரவி மரியா கதையின் நாயகனாக முதன்மையான வேடத்தில் நடித்திருக்கும் 'மக்கள் தலைவா ' திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது.
இயக்குநர் ராம் தேவ் இயக்கத்தில் உருவாகியுள்ள 'மக்கள் தலைவா' திரைப்படத்தில் ரவி மரியா, அக்சரா விஜய், ராதா ரவி, பழ. கருப்பையா, நாஞ்சில் சம்பத், இயக்குநர் பேரரசு, கஞ்சா கருப்பு, கவிதாலயா சரவணன், அக்னி S வருண் மற்றும் பலர் நடித்துள்ளனர்.
கார்த்திக் எஸ். நாயர் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு துளசி ராமன் இசையமைத்திருக்கிறார்.
காமெடி வித் பொலிடிக்கல் என்டர்டெய்னராக தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை தயாரிப்பாளர் கவிதாலயா சரவணன் தயாரித்திருக்கிறார். இவருடன் எஸ். வெங்கடேசன்- R சந்திரசேகரன் - T ராம்குமார் ஆகியோர் இணை தயாரிப்பாளர்களாக உள்ளனர்.
அனைத்து பணிகளும் நிறைவடைந்து திரையரங்குகளில் வெளியிடுவதற்காக திட்டமிடப்பட்டு வரும் இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது.
இந்த விழாவில் படக் குழுவினருடன் இயக்குநர்கள் கே. பாக்யராஜ், ஆர். கே. செல்வமணி, ஆர். வி. உதயகுமார், எழில் , நந்தா பெரியசாமி, பிருந்தா சாரதி, லியாகத் அலிகான், சி. ரங்கநாதன், ஏ. ஆர். வெங்கடேஷ் வசனகர்த்தா வி. பிரபாகர், இசையமைப்பாளர் தீனா, விநியோகஸ்தர் ஸ்ரீதர், தொழிலதிபர் சுப்புராஜ் உள்ளிட்ட பலர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.
நிகழ்வில்,இயக்குநர் ராம் தேவ் பேசுகையில்,
வாழ்க்கையில் இந்த தருணத்தை பொக்கிஷமாகவும் சந்தோஷமாகவும் அனுபவிக்கிறேன்.
ஏனெனில் நான் பார்த்து மிரண்ட திரையுலக ஜாம்பவான்கள் அனைவரும் இந்த மேடையில் ஒன்றாக அமர்ந்துள்ளனர்.
இவர்கள் அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றி, என்றார்.
இயக்குநர் ஆர். கே. செல்வமணி பேசுகையில்,
1986 ஆம் ஆண்டில் மணிவண்ணன் இயக்கத்தில் வெளியான 'தீர்த்தக் கரையினிலே' என்ற படத்திற்கு தயாரிப்பாளர் பழ. கருப்பையா. அந்தப் படத்தில் நான் உதவி இயக்குநர்.
நாற்பது ஆண்டுகளுக்குப் பிறகு அவரை இந்த மேடையில் பார்க்கும் போது மகிழ்ச்சியாக இருக்கிறது.
இந்த நிகழ்விற்கு ஏராளமான திரையுலக பிரபலங்கள் வருகை தந்திருக்கிறார்கள் என்றால்,
அதற்கு ரவி மரியாவின் நட்புதான் காரணம்.
ரவி மரியா சிறந்த நடிகர் மட்டுமல்ல சிறந்த பண்பாளர். அனைவருக்கும் உதவி செய்யும் தாராள மனப்பான்மை கொண்டவர். சிறந்த படைப்பாளியும் கூட. இயக்குநர் சங்கத்தின் பொறுப்பில் இருந்தபோது உறுப்பினர்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்குவதற்காக கேட்டவுடன் எந்தவித தயக்கமும் இல்லாமல் லட்சக்கணக்கான ரூபாயை நன்கொடையாக வழங்கியவர்.
இந்தப் படத்தில் அவர் கதையின் நாயகனாக நடித்திருக்கிறார். இங்கு திரையிடப்பட்ட இரண்டு பாடல்களும் சிறப்பாக இருந்தது. இசையமைப்பாளர் துளசிராமனுக்கு சிறந்த எதிர்காலம் இருக்கிறது. அவரையும் வாழ்த்துகிறேன்.
இந்தப் படத்தின் டிரைலர் திரையிடப்படவில்லை. ஏனென்று கேட்டபோது.. சென்சார் பிரச்சனை என்றார்கள்.
பொதுவாக இது போன்ற பிரிவியூ தியேட்டர்களில் ட்ரெய்லரை திரையிடும்போது யாரும் சென்சார் சர்டிபிகேட்டுக்கு முக்கியத்துவம் கொடுப்பதில்லை. ஆனால் அதே தருணத்தில் படம் சற்று வில்லங்கமாக இருந்தால் பிரிவ்யூ தியேட்டரில் திரையிடுவதற்கு தயக்கம் தெரிவிப்பார்கள். அப்படி என்றால்... இந்தப் படத்தில் ஏதோ வில்லங்கம் இருக்கிறது என்று தெரிகிறது.
பத்து ஆண்டுகளுக்கு முன்பு வெளியான 'தலைவா' படத்திற்கும் சென்சார் பிரச்சனை இருந்தது. தற்போது தயாராகி இருக்கும் 'மக்கள் தலைவா' படத்திற்கும் சென்சார் பிரச்சனை இருக்கிறது.
ஆனால் நாங்கள் படத்தை இயக்கிய போது எங்களுக்கு அத்தகைய நெருக்கடி இருந்ததில்லை. 'மக்களாட்சி' என்ற அரசியல் படத்தை இயக்கிய போது எனக்கு எந்தவித சிக்கலும் ஏற்பட்டதில்லை. அப்போது படைப்பாளிகளுக்கு சிறிதளவு சுதந்திரம் இருந்தது என நினைக்கிறேன். ஆனால் தற்போது உள்ள படைப்பாளிகளுக்கு கண்ணுக்குத் தெரியாத ஒரு பயம் சூழ்ந்திருக்கிறது.
இந்தப் படத்தை செய்யலாமா...? படத்தை இயக்கினால் தணிக்கை செய்வார்களா? தணிக்கை செய்த பின்பு திரையரங்குகளில் வெளியிடுவார்களா? மத்திய அரசு இந்த படத்திற்கு சென்சார் செய்யுமா? அதையும் கடந்து வந்தால் மாநில அரசாங்கம் இந்த படத்தை திரையரங்குகளில் வெளியிட அனுமதிக்குமா.. ?அதையும் கடந்து படம் திரையரங்குகளில் வெளியானால் இங்குள்ள ஜாதி, மத அமைப்புகள் ஏதேனும் பிரச்சனைகளை ஏற்படுத்தி படத்தை நிறுத்தி விடுவார்களா? என பல விசயங்கள் இருக்கிறது.
ஒரு படைப்பாளி ஒரு உண்மையை சொல்வதற்கு ஏராளமானவர்களுக்கு பயப்பட வேண்டிய சூழல் இன்று இருக்கிறது.
உண்மையை தவிர வேறு எதை வேண்டுமானாலும் திரைப்படங்களில் பேசலாம். உண்மையைப் பேசினால் மட்டும்தான் அந்தத் திரைப்படம் வெளியில் வருவதற்கு கஷ்டம். பொய்யை பேசலாம்... கற்பனையைப் பேசலாம் ...ஆபாசத்தை பேசலாம்... அருவெறுப்பை பேசலாம்... வன்முறையை பேசலாம்... கலாச்சார சீரழிவை பற்றி பேசலாம்... ஆனால் உண்மையை மட்டும் பேசக்கூடாது. மீறி பேசினால் அந்தப் படம் இந்தியாவில் வெளியாவது கஷ்டம். இதனை நான் உணர்ந்து தான் சொல்கிறேன். இதற்கு மிகப்பெரிய உதாரணம் எனது இயக்கத்தில் உருவான 'குற்ற பத்திரிக்கை'. இந்தப் படம் என் வாழ்க்கையே திசை மாற்றிய படம்.
இன்றுள்ள படைப்பாளிகள் எப்படி இந்த விசயத்தை சொல்வது என்பதை தெரிந்து கொண்டிருக்கிறார்கள். அதனை கொஞ்சம் காமெடியாக சொல்லத் தொடங்கி இருக்கிறார்கள். அந்த வகையில் 'மக்கள் தலைவா' படம் உருவாகி இருக்கிறது. அதிலும் நாஞ்சில் சம்பத்- பழ கருப்பையா- ராதாரவி - என அரசியல்வாதிகள் நடித்திருக்கிறார்கள். அதனால் இந்த படத்தில் ஏதோ ஒரு விசயம் இருக்கிறது என்பது மட்டும் தெரிகிறது.
நட்பிற்கு இலக்கணமாக திகழும் ராதாரவி. இந்தப் படத்தைப் பற்றியும், இதில் பணியாற்றிய கேமராமேனை பற்றியும் பாராட்டி பேசினார். சின்ன பட்ஜெட் தயாரிப்பாளர்களுக்கு அவர் ஒரு சூப்பர் ஸ்டாரான கேமரா மேன் என குறிப்பிட்டார். எனக்கு கேமரா மேன் கார்த்திக் பற்றி எதுவும் தெரியாது. ஆனால் அவருடைய வேலையைப் பற்றி ராதாரவி சொன்ன பிறகுதான் அவருடைய திறமையை நான் தெரிந்து கொண்டேன். இந்தப் படத்துக்குப் பிறகு அவருக்கும் பெரிய எதிர்காலம் உள்ளது.
இந்த படத்தின் டைட்டில் 'மக்கள் தலைவா' மட்டுமல்ல.. அதன் கீழ் 'ஃபார் சேல்' என இடம் பிடித்திருக்கிறது. இதைப் பற்றி புரிந்தவர்களுக்கு நன்கு தெரியும். இப்படி யோசிப்பதற்கு ஒரு துணிச்சல் வேண்டும். அதனை டைட்டிலில் டேக் லைனாக இடம்பெறச் செய்வதற்கும் ஒரு தைரியம் வேண்டும். நாம் அரசியலில் யாரையும் குறை சொல்லப் போவதில்லை. ஆனால் ஒரு பாட்டிலுக்கு பத்து ரூபாய் என்பதை பலர் சொல்லிக் கொண்டிருந்தனர். படத்தில் இந்த கதாபாத்திரத்தில் பேரரசு நடித்திருக்கிறார்.
நடிகர் ரவி மரியாவிற்கு இடுப்பு வளையாது. ஆனால் இந்த படத்தில் அவர் ஹீரோயினுடன் பாடல் காட்சியில் நன்றாக டான்ஸ் ஆடி இருக்கிறார். அவருடைய நல்ல மனதிற்கும் நகைச்சுவையான படம் என்பதாலும் இந்த படம் பெரிய வெற்றி பெற வேண்டும் என வாழ்த்துகிறேன் என்றார்.
நடிகை அப்சரா விஜய் பேசுகையில்,
இந்தப் படத்தில் வாய்ப்பு அளித்த இயக்குநருக்கும், தயாரிப்பாளருக்கும் நன்றி. படப்பிடிப்பு தளத்தில் ரவி மரியா சார் நடிப்பு , நடனம் என பல விசயங்களில் பயனுள்ள குறிப்புகளை வழங்கினார். இந்தப் படத்தை அனைவரும் திரையரங்கத்திற்கு வருகை தந்து பார்த்து ஆதரவு தர வேண்டும் என்றார்.
நடிகர் ரவி மரியா பேசுகையில்,
என்னுடைய அன்பிற்காக, நட்பிற்காக இங்கு வருகை தந்திருக்கும் அனைவருக்கும் நன்றி.
வழக்கமாக நான் அனைத்து படங்களிலும் வில்லனாக நடித்தாலும் காமெடியாக நடித்தாலும் கேரக்டரில் நடித்தாலும் நிறைய பேசுவேன். ஆனால் இந்த படத்தில் கதாநாயகன் என்பதால்.. நிறைய பேசவில்லை. இருந்தாலும் இந்தப் படத்தை அனைவரும் திரையரங்குகளில் பார்த்து ரசித்து ஆதரவு தர வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன் என்றார்.
நடிகர் கஞ்சா கருப்பு பேசுகையில்,
தயாரிப்பாளர் கவிதாலயா சரவணன் தேனியின் மன்னன்.. சினிமாக்காரர்களின் அண்ணன்.. அவருடைய வீட்டிற்கு விருந்தினர்களாக செல்பவர்களுக்கு உணவு உபசரிப்பதுடன் பெரிய அளவிலான திருப்பதி வெங்கடாஜலபதி புகைப்படத்தையும் பரிசாகத் தருவார். இந்தப் பரிசை சித்தப்பா பேரரசு வாங்கினார். அவர் தலைவர் ஆகிவிட்டார். நானும் வாங்கினேன். விரைவில் தலைவராகி விடுவேன். 'மக்கள் தலைவா' படத்தில் நானும் நடித்திருக்கிறேன். அதனால் நானும் தலைவனாகி விடுவேன்.
இயக்குநர் ராம்தேவுக்கு தேவை என்றால் அதிகாலை மூன்று மணிக்கு போன் செய்து பேசுவார். ஒருமுறை அதிகாலை 4 மணிக்கு படப்பிடிப்பு .முதல் காட்சி உங்களது தான். வந்து விடுங்கள் என்றார். நானும் நான்கு மணிக்கு அவர் சொன்ன ஒயின்ஷாப்பிற்கு சென்றேன். கதவு மூடி இருந்தது. யாரும் அங்கு இல்லை. அன்று ஒயின்ஷாப் விடுமுறை. கதவை தட்டியதும் உள்ளே இருந்து ஒருவர் எட்டிப் பார்த்தார். அவர் இன்று பிளாக்கில் சரக்கு கிடைக்காது என்றார். அவரிடம் நான் சரக்கு வாங்க வரவில்லை. நடிக்க வந்திருக்கிறேன். இயக்குநர் இங்கு தான் வர சொன்னார் என்றேன். அதன் பிறகு தயாரிப்பு நிர்வாகி போன் செய்து வந்துவிடுகிறேன் என்றார்.
இயக்குநர் கே. பாக்யராஜ் பேசுகையில்,
எந்த பூவின் வாசமும் காற்று எந்த திசையில் வீசுகிறதோ.. அந்த திசையில் தான் பயணிக்கும். ஆனால் ஒரு பூவின் வாசம் மட்டும் காற்றுக்கு எதிர் திசையில் கூட வாசம் வீசும். அது என்னவென்றால் ஒரு மனிதரின் நற்பண்பு. இது ரவி மரியாவிற்கு பொருந்தும். இங்கு பேசிய அனைவரும் ரவி மரியாவின் உதவும் குணத்தையும் , பெருந்தன்மையையும் குறிப்பிட்டனர். இதை கேட்கும் போது சந்தோஷமாக இருந்தது.
நான் அவருடன் அதிகமாக உரையாடியதில்லை. அவர் பார்ப்பதற்கு கரடு முரடானவர் போல் இருந்தாலும்.. அவருடைய பேச்சு முரணாக இருந்தாலும்.. ஆனால் அவருடைய கேரக்டர் இவ்வளவு சிறப்பாக இருக்கிறதைப் பார்க்கும் போது எனக்கு உண்மையிலேயே மகிழ்ச்சியாக இருக்கிறது.
இந்தப் படத்தில் அவர் முதன்முதலாக கதையின் நாயகனாக நடித்திருக்கிறார். அதனால் இந்த நிகழ்ச்சியை அவரே முன்நின்று ஒருங்கிணைத்து வருகிறார்.
நான் இங்கு வந்த பிறகு தான் இந்தப் படத்தில் நாஞ்சில் சம்பத் - பழ கருப்பையா போன்றவர்கள் நடித்திருக்கிறார்கள் என்பதை அறிந்து கொண்டேன். இவர்களுடைய தமிழை கேட்க மிகவும் விரும்புவேன். எல்லோராலும் இலக்கண சுத்தமாக தமிழில் பேச முடியாது. அதில் அவர்கள் சிறப்பாக பேசக்கூடியவர்கள்.
இந்தப் படத்தில் பணியாற்றிய ஒளிப்பதிவாளர்- இசையமைப்பாளர் -நடிகர்கள்- நடிகைகள்- என அனைவருக்கும் என்னுடைய வாழ்த்துக்கள், என்றார்.
Hindusthan Samachar / Durai.J