Enter your Email Address to subscribe to our newsletters

ஹைதராபாத் , 15 ஜூன் (ஹி.ச.)
தெலங்கானாவில் கோடை விடுமுறைக்குப் பிறகு பள்ளிகள் நேற்று மீண்டும் திறக்கப்பட்டதைத் தொடர்ந்து, அரசு பள்ளி மாணவர்களின் நலனைக் கருத்தில் கொண்டு புதிய காலை உணவு (அல்பாஹாரம்) திட்டத்தை மாநில அரசு தொடங்கியுள்ளது.
மாநிலம் முழுவதும் 1,269 அரசு பள்ளிகளில் இந்த திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. இதன் மூலம் சுமார் 1.44 லட்சம் மாணவர்கள் நேரடியாக பயன்பெற உள்ளனர்.
இந்த திட்டத்தின் கீழ் வாரத்தில் மூன்று நாட்கள் மாணவர்களுக்கு பால் வழங்கப்படும். மீதமுள்ள மூன்று நாட்களில் ராகி மால்ட் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த வசதி முன்பள்ளி முதல் இண்டர்மீடியட் வரை உள்ள அனைத்து மாணவர்களுக்கும் கிடைக்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
மாணவர்களின் ஊட்டச்சத்து குறைபாட்டை குறைப்பது, பள்ளி வருகையை அதிகரிப்பது மற்றும் இடைநிற்றலை தடுப்பது ஆகியவை இந்த திட்டத்தின் முக்கிய நோக்கங்களாக அரசு தெரிவித்துள்ளது.
இதேபோல், ஏற்கனவே செயல்பாட்டில் உள்ள மதிய உணவு திட்டம் அரசு ஜூனியர் கல்லூரி மாணவர்களுக்கும் விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது.
இதற்கான தொடக்க நிகழ்ச்சி ஹைதராபாத்தில் உள்ள ராஜ்பவன் அரசு மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது.
போக்குவரத்து மற்றும் பிசி நலத்துறை அமைச்சர் பொன்னம் பிரபாகர் இந்த திட்டத்தை தொடங்கி வைத்து, மாணவர்களுக்கு புத்தகங்களையும் வழங்கினார்.
இதற்கிடையில், பள்ளிகள் மீண்டும் திறக்கப்பட்டதையொட்டி மாணவர்களுக்கு வாழ்த்து தெரிவித்த முதலமைச்சர் ரேவந்த் ரெட்டி,
பள்ளிகள் என்பது கல்வி கற்கும் இடம் மட்டுமல்ல, மாணவர்களின் எதிர்காலத்தையும் தன்மையையும் வடிவமைக்கும் இடம் என கூறினார்.
மாணவர்கள் சிறப்பாக படித்து தங்கள் இலக்குகளை அடைய வேண்டும் என்றும் அவர் அறிவுறுத்தினார்.
Hindusthan Samachar / M.DEEPAK RAJA