Enter your Email Address to subscribe to our newsletters

திருச்சி, 15 ஜூன் (ஹி.ச.)
திருச்சி மலைக்கோட்டை பகுதியில் தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய்யின் பிறந்தநாளை முன்னிட்டு நலத்திட்ட உதவிகள் வழங்குவது தொடர்பாக நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தைத் தொடர்ந்து, கட்சிக்குள் கோஷ்டி மோதல் வெடித்துள்ளது.
சமீபத்தில் அதிமுக மற்றும் அமமுக உள்ளிட்ட கட்சிகளில் இருந்து விலகி தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்த நிர்வாகிகள் சார்பில் இந்த ஆலோசனைக் கூட்டம் நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது.
குறிப்பாக, அமமுகவில் இருந்து தவெகவில் இணைந்த பாலு என்பவர் இந்த நிகழ்வை ஏற்பாடு செய்திருந்தார்.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்ததாக கூறப்படும் தவெக மூத்த நிர்வாகிகளான நிர்மல், சதீஷ் உள்ளிட்டோர் பாலுவின் வீட்டிற்கு சென்று,
நாங்கள் ரசிகர் மன்ற காலத்திலிருந்தே இருக்கிறோம், எங்களது பேச்சை கேட்க வேண்டும் என்று மிரட்டியதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இந்த சம்பவம் தொடர்பான காட்சிகள் அப்பகுதியில் உள்ள சிசிடிவியில் பதிவாகியுள்ளதாகவும், அவை சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருவதாகவும் கூறப்படுகிறது.
இந்த விவகாரம் தொடர்பாக பாலு, தனது ஆதரவாளர்களுடன் திருச்சி கோட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகாரை தொடர்ந்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதற்கிடையில் குற்றச்சாட்டுக்கு உள்ளான நிர்மல், சதீஷ் உள்ளிட்டோர், “20 ஆண்டுகளாக விஜய் ரசிகர் மன்றம் மற்றும் தவெக இயக்கத்திற்காக பணியாற்றி வருகிறோம். பாலு உள்ளிட்ட புதிய உறுப்பினர்களை வரவேற்கிறோம். ஆனால் எந்த அதிகாரப்பூர்வ பொறுப்பும் இல்லாத நிலையில், தங்களை தொகுதி மற்றும் மாவட்ட நிர்வாகிகள் எனக் குறிப்பிடும் வகையில் பிளக்ஸ் வைத்தது குறித்து விளக்கம் கேட்கவே சென்றோம்.
மிரட்டல் எதுவும் விடுக்கவில்லை. அனைவரும் இணைந்து செயல்பட வேண்டும் என்பதையே தெரிவித்தோம். எங்கள் மீது பொய்யான புகார் அளிக்கப்பட்டுள்ளது என விளக்கம் அளித்துள்ளனர்.
இரு தரப்பினரும் ஒருவரை ஒருவர் குற்றம் சாட்டி வரும் நிலையில், திருச்சி தவெக அமைப்பில் கோஷ்டி மோதல் வெளிப்படையாக வெடித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Hindusthan Samachar / GOKILA arumugam