Enter your Email Address to subscribe to our newsletters

ஶ்ரீவில்லிபுத்தூர், 16 ஜூன் (ஹி.ச.)
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில் அமைந்துள்ள உலக பிரசித்தி பெற்ற ஆண்டாள் கோயில் 108 திவ்ய தேசங்களில் ஒன்றாகும். இக்கோயிலில் பெரியாழ்வார் அவதரித்த ஆனி மாத சுவாதி உற்சவம் ஆண்டுதோறும் திருவிழாவாக வெகு விமரிசையாக கொண்டாடப்படுவது வழக்கம்.
அதன்படி, இந்த ஆண்டு பெரியாழ்வார் ஆனி சுவாதி உற்சவம் இன்று (ஜூன் 16) காலை 7.40 மணிக்கு கொடியேற்றத்துடன் தொடங்கியது.
ஸ்ரீ பெரியாழ்வார் சன்னதிக்கு முன்பாக உள்ள தங்கக் கொடிமரத்தில் கருடாழ்வார் உருவம் பொறித்த கொடிக்கு சிறப்பு பூஜைகள் செய்து பிரகாஷ் பட்டர் கொடி ஏற்றி வைத்தார். தொடர்ந்து தீபாராதனை நடைபெற்றது.
விழாவில் தினசரி காலை பெரியாழ்வார் மண்டபம் எழுந்தருளல், இரவு பல்வேறு வாகனங்களில் திருவீதி உலா நடைபெறும். ஜூன் 24- ம் தேதி பெரியாழ்வார் செப்புத் தேரோட்டம் நடைபெறுகிறது.
ஜூன் 25-ம் தேதி தீர்த்தவாரி, மங்களாசாசனம் நடைபெறுகிறது. கோயில் செயல் அலுவலர் சர்க்கரை அம்மாள், ஆய்வாளர் முத்து மணிகண்டன் மற்றும் அறநிலையத்துறை அதிகாரிகள் விழாவுக்கான ஏற்பாடுகளை செய்து வருகின்றனர்.
Hindusthan Samachar / vidya.b