மேகதாது அணை கட்டும் முயற்சிக்கு எதிர்ப்பு - காரைக்காலில் விவசாயிகள் சாலை மறியல்
காரைக்கால், 16 ஜூன் (ஹி.ச.) காவிரியின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்டுவதற்கு தமிழ்நாட்டிடம் அனுமதி கேட்க தேவையில்லை என்றும், மேகதாதுவில் புதிய அணைக்கட்டும் விரிவான திட்டத்தை மத்திய அரசிடம் சமர்ப்பிக்க உள்ளதாகவும் கர்நாடக துணை முதலமைச்சர் டி.கே.
Farmers stage a road blockade in Karaikal


காரைக்கால், 16 ஜூன் (ஹி.ச.)

காவிரியின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்டுவதற்கு தமிழ்நாட்டிடம் அனுமதி கேட்க தேவையில்லை என்றும், மேகதாதுவில் புதிய அணைக்கட்டும் விரிவான திட்டத்தை மத்திய அரசிடம் சமர்ப்பிக்க உள்ளதாகவும் கர்நாடக துணை முதலமைச்சர் டி.கே.சிவகுமார் அண்மையில் தெரிவித்திருந்தார்.

மேலும் மத்திய அரசிடம் அனுமதி கிடைத்த பிறகு திட்டத்திற்கான பூமி பூஜை போடப்படும். மேகதாதுவில் அணைக்கட்டும் விஷயத்தில் கர்நாடக அரசு உறுதியாக உள்ளது என கர்நாடக துணை முதலமைச்சர் டி.கே.சிவகுமார் தெரிவித்திருந்தார்.

இதற்கு தமிழ்நாடு முழுவதும் திமுக, அதிமுக, நாம் தமிழர் கட்சி உள்ள அரசியல் கட்சியினர் கடும் கண்டனத்தை தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில் காரைக்கால் மாவட்டத்தில் விவசாயிகள் மேகதாது அணை கட்டும் முயற்சிக்கு எதிர்ப்பு இன்று திடீரென சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே திரண்ட நூற்றுக்கணக்கான விவசாயிகள், கர்நாடக அரசு மேகதாது பகுதியில் அணை கட்டும் முயற்சியை மத்திய, மாநில அரசுகள் உடனடியாக தடுத்து நிறுத்த வேண்டும் என வலியுறுத்தினர்.

மேகதாது அணை கட்டப்பட்டால் காவிரி நீரை நம்பியுள்ள காரைக்கால் விவசாயம் முற்றிலும் பாதிக்கப்படும் என்றும், குறுவை, சம்பா சாகுபடிக்கு கடும் நெருக்கடி ஏற்படும் என்றும் போராட்டக்காரர்கள் கவலை தெரிவித்தனர்.

மேலும், காவிரி நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பின்படி காரைக்கால் பகுதிக்கு ஒதுக்கப்பட்ட 7 டிஎம்சி தண்ணீரை உடனடியாக திறந்துவிட நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர்கள் கோரிக்கை விடுத்தனர்.

போராட்டத்தின் காரணமாக அப்பகுதியில் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது.

சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர், விவசாய சங்கப் பிரதிநிதிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.

மேகதாது விவகாரத்தில் உறுதியான நடவடிக்கை எடுக்காவிட்டால், போராட்டத்தை தீவிரப்படுத்துவோம் என விவசாயிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

Hindusthan Samachar / vidya.b