Enter your Email Address to subscribe to our newsletters

கன்னியாகுமரி, 16 ஜூன் (ஹி.ச.)
கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல் பேருந்து நிலையம் அருகே உள்ள மார்க்கெட் பகுதியில் கஞ்சா போதையில் இருந்த இளைஞர்கள் இடையே ஏற்பட்ட மோதல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த சம்பவத்தின் சிசிடிவி காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன.
பொதுமக்கள் மற்றும் வியாபாரிகள் அதிகம் கூடும் குளச்சல் மார்க்கெட் பகுதிக்கு இரவு நேரங்களில் வரும் சில போதை கும்பல்கள், போதையில் அட்டூழியங்களில் ஈடுபட்டு வருவதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.
இந்த நிலையில், சனிக்கிழமை இரவு மார்க்கெட்டிற்கு வந்த போதை இளைஞர்கள் இடையே திடீரென வாக்குவாதம் ஏற்பட்டு பின்னர் அது மோதலாக மாறியது.
ஒருவரையொருவர் தாக்கிக் கொண்டிருந்த நிலையில், ஒரு இளைஞர் அருகில் இருந்த இறைச்சிக் கடையில் வைக்கப்பட்டிருந்த வெட்டுக் கத்தியை எடுத்துக் கொண்டு மற்றொரு இளைஞரை விரட்டியதாக கூறப்படுகிறது. இதனால் அப்பகுதியில் பதற்றமான சூழல் நிலவியது.
இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள், போதை இளைஞர்களை அங்கிருந்து விரட்ட முயன்றனர்.
அவர்கள் எச்சரித்தும் கேட்காததால், சிலர் கம்புகளால் விரட்டி அப்பகுதியை காலி செய்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்த சம்பவம் தொடர்பான சிசிடிவி காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் பரவி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. மோதலில் காயமடைந்த இளைஞர் ஒருவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், அவரிடம் குளச்சல் காவல் நிலையம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மார்க்கெட் பகுதியில் அடிக்கடி அட்டூழியங்களில் ஈடுபடும் போதை கும்பல்களை கண்காணித்து, கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மேலும், இரவு நேர காவல் கண்காணிப்பை அதிகரிக்க வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
Hindusthan Samachar / GOKILA arumugam