Enter your Email Address to subscribe to our newsletters

புதுடெல்லி, 16 ஜூன் (ஹி.ச.)
மருத்துவரின் பரிந்துரைச் சீட்டு இருந்தால் மட்டுமே இனி இருமல் மருந்துகள் உள்பட அனைத்து வகையான சிரப் மருந்துகளும் வழங்கப்பட வேண்டும் என மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகம் புதிய அறிவிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
இந்த அதிரடி உத்தரவு உடனடியாக அமலுக்கு வருவதாகவும், நாடு முழுவதும் உள்ள அனைத்து மருந்தகங்களும் இந்த விதிமுறையை கண்டிப்பாக பின்பற்ற வேண்டும் எனவும் அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இனி இருமல், சளி, காய்ச்சல் போன்றவற்றுக்கு பயன்படுத்தப்படும் சிரப் வகை மருந்துகளை மருத்துவரின் பரிந்துரை இல்லாமல் நேரடியாக வாங்க முடியாது.
அண்மையில் மத்தியப் பிரதேச மாநிலத்தில் இருமல் மருந்து உட்கொண்டதால் குழந்தைகள் உயிரிழந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இதையடுத்து, குழந்தைகளின் பாதுகாப்பை கருத்தில் கொண்டும், மருந்துகள் தவறாக பயன்படுத்தப்படுவதை தடுக்கும் நோக்கிலும் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
குறிப்பாக கோடீன் பாஸ்பேட் போன்ற போதை தரும் மூலப்பொருட்கள் கலந்த இருமல் மருந்துகள் இளைஞர்களால் தவறாக பயன்படுத்தப்படுவதாக தொடர் புகார்கள் எழுந்து வந்தன.
இந்த புதிய கட்டுப்பாடு மூலம் சுயமாக மருந்து எடுத்துக்கொள்ளும் பழக்கத்தை குறைத்து, மருத்துவரின் ஆலோசனையுடன் மட்டுமே சிகிச்சை பெறுவதை உறுதி செய்ய முடியும் என மத்திய அரசு நம்புகிறது.
விதிமுறையை மீறும் மருந்தகங்கள் மீது மருந்து மற்றும் அழகுசாதனப் பொருட்கள் சட்டத்தின் கீழ் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும், உரிமம் ரத்து செய்யப்படும் வாய்ப்பு உள்ளதாகவும் சுகாதாரத்துறை எச்சரித்துள்ளது.
எனவே பொதுமக்கள் இனி சிறிய உடல்நலக் கோளாறுகளுக்கும் மருத்துவரை அணுகி, பரிந்துரை பெற்ற பிறகே மருந்துகளை வாங்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.
Hindusthan Samachar / vidya.b