மதுரை நீதிமன்ற வளாகத்தில் கண்ணகி, பாண்டியன் நெடுஞ்செழியன் சிலைகள் அமைக்கக் கோரிய மனு தள்ளுபடி
மதுரை, 16 ஜூன் (ஹி.ச.) மதுரை உயர்நீதிமன்றக் கிளை வளாகத்தில் சிலப்பதிகாரத்தின் நாயகி கண்ணகி மற்றும் பாண்டிய மன்னன் நெடுஞ்செழியன் ஆகியோருக்கு சிலைகள் அமைக்க வேண்டும் எனக் கோரி மதுரை கே.கே. நகரைச் சேர்ந்த செல்வகுமார் என்பவர் பொதுநல மனுவை சென்னை உய
மதுரை நீதிமன்ற வளாகத்தில் கண்ணகி, பாண்டியன் நெடுஞ்செழியன் சிலைகள் அமைக்கக் கோரிய மனு தள்ளுபடி


மதுரை, 16 ஜூன் (ஹி.ச.)

மதுரை உயர்நீதிமன்றக் கிளை வளாகத்தில் சிலப்பதிகாரத்தின் நாயகி கண்ணகி மற்றும் பாண்டிய மன்னன் நெடுஞ்செழியன் ஆகியோருக்கு சிலைகள் அமைக்க வேண்டும் எனக் கோரி மதுரை கே.கே. நகரைச் சேர்ந்த செல்வகுமார் என்பவர் பொதுநல மனுவை சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் தாக்கல் செய்திருந்தார்.

அவர் தாக்கல் செய்த மனுவில்,

தமிழர்களின் பண்பாட்டு அடையாளமாக விளங்கும் கண்ணகி மற்றும் நீதி தவறியதற்காக உயிர் துறந்த பாண்டியன் நெடுஞ்செழியன் ஆகியோரின் சிலைகளை நீதிமன்ற வளாகத்தில் நிறுவுவது, நீதியின் முக்கியத்துவத்தை எடுத்துக்காட்டும் என குறிப்பிடப்பட்டிருந்தது.

இந்த வழக்கை இன்று விசாரித்த நீதிபதிகள், நீதிமன்ற வளாகங்களில் சிலைகள் அமைப்பது தொடர்பான கொள்கை முடிவுகளை சூழலுக்கு ஏற்ப கூடுதல் நீதிபதிகள் கொண்ட முழு அமர்வுதான் எடுக்க வேண்டும் எனத் தெரிவித்தனர்.

தனி நபர் தாக்கல் செய்யும் பொதுநல மனு மூலம் இதுபோன்ற கோரிக்கைகளுக்கு உத்தரவு பிறப்பிக்க இயலாது எனக் கூறி, மனுதாரர் செல்வகுமாரின் மனுவை தள்ளுபடி செய்தனர்.

நீதிமன்ற வளாகத்தின் கட்டமைப்பு, பாதுகாப்பு மற்றும் நிர்வாகம் சார்ந்த முடிவுகள் நீதித்துறையின் உள் நிர்வாக அமைப்பின் மூலமே எடுக்கப்பட வேண்டும் என்றும், அதில் நீதிமன்றம் தலையிட முடியாது என்றும் நீதிபதிகள் தங்கள் உத்தரவில் சுட்டிக்காட்டினர்.

Hindusthan Samachar / vidya.b