நாகர்கோவிலில் ரயில்வே மேம்பாலப் பணி காரணமாக நாளை முதல் போக்குவரத்து மாற்றம் - காவல்துறை அறிவிப்பு
கன்னியாகுமரி, 16 ஜூன் (ஹி.ச.) கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் மாநகரில் நிலவும் போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் வகையில், ஒழுகினசேரி பகுதியில் ரயில்வே மேம்பாலம் கட்டப்பட்டு வருகிறது. இதன் தொடர்ச்சியாக, ஒழுகினசேரி சந்திப்பில் பயன்பாடற்ற நில
ரயில்வே மேம்பாலப் பணி காரணமாக நாளை முதல் போக்குவரத்து மாற்றம் - காவல்துறை அறிவிப்பு


கன்னியாகுமரி, 16 ஜூன் (ஹி.ச.)

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் மாநகரில் நிலவும் போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் வகையில், ஒழுகினசேரி பகுதியில் ரயில்வே மேம்பாலம் கட்டப்பட்டு வருகிறது.

இதன் தொடர்ச்சியாக, ஒழுகினசேரி சந்திப்பில் பயன்பாடற்ற நிலையில் உள்ள பழைய ரயில்வே கட்டடத்தை இடிக்கும் பணி தற்போது தொடங்கப்பட்டுள்ளது.

மேம்பாலத்தின் இறுதிக்கட்டப் பணிகளை விரைந்து முடிக்க வேண்டியது அவசியமாக உள்ளதால், பாதுகாப்பான பணிகளுக்காகச் சுமார் 15 நாட்களுக்குப் போக்குவரத்தை முழுமையாக மாற்றித் தரும்படி ரயில்வே துறை அதிகாரிகள் தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது.

இதன் காரணமாக ஒழுகினசேரி பகுதியில் தற்காலிகமாகப் பின்வரும் போக்குவரத்து மாற்றங்கள் செய்ய எஸ்பி ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார்.

அதன்படி தற்போது பயன்பாட்டில் உள்ள பழைய மேம்பாலமானது தற்காலிகமாக ஒருவழிப் பாதையாக

(One-way) மாற்றப்படுகிறது. இதன் மூலம், வடசேரியிலிருந்து அப்டா மார்க்கெட் நோக்கிச் செல்லும் வாகனங்கள் மட்டும் வழக்கம்போல ஒழுகினசேரி வழியாகச் செல்ல அனுமதிக்கப்படும்.

நெல்லை மார்க்கத்திலிருந்து வரும் அனைத்து வாகனங்களும் நான்கு வழிச்சாலை வழியாகப் புத்தேரி சென்று, அங்கிருந்து அசம்பு சாலை வழியாக வடசேரியைச் சென்றடைய வேண்டும்.

இந்தக் தற்காலிகப் போக்குவரத்து மாற்றம் நாளை (ஜூன் 17-ஆம் தேதி) அதிகாலை முதல் அதிகாரப்பூர்வமாக அமலுக்கு வருகிறது. ரயில்வே அதிகாரிகள் உறுதியளித்துள்ளபடி, திட்டமிட்டபடி 15 நாட்களுக்குள் அனைத்துப் பணிகளும் முழுமையாக முடித்துத் தரப்படும்.

மாநகரின் நீண்ட காலப் போக்குவரத்துப் பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வு காணும் நோக்கில் இந்தத் தற்காலிக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதால், வாகன ஓட்டிகளும் பொதுமக்களும் மாவட்ட நிர்வாகத்திற்கும், காவல் துறைக்கும் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என

எஸ்பி ஸ்டாலின் கேட்டுக்கொண்டுள்ளார்.

Hindusthan Samachar / vidya.b