Enter your Email Address to subscribe to our newsletters


சென்னை, 19 ஜூன் (ஹி.ச.)
தமிழகத்தின் விவசாய வரலாற்றில் அழியாத இடம்பிடித்துள்ள 1970ஆம் ஆண்டு மின் கட்டண உயர்வுக்கு எதிரான விவசாயிகள் போராட்டத்தில் உயிர்த் தியாகம் செய்த மூன்று விவசாயிகளுக்கு தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை வீரவணக்கம் செலுத்தியுள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
ஒரு பைசா மின் கட்டண உயர்வைக் கூட ஏற்க முடியாது என்று விவசாயிகளின் வாழ்வாதாரத்தை பாதுகாக்கப் போராடிய அந்த இயக்கத்தில் தங்களது இன்னுயிரை ஈந்த மூன்று விவசாய தியாகிகளுக்கு ஆழ்ந்த மரியாதையையும் வீரவணக்கத்தையும் தெரிவித்தார்.
உலகிற்கு உணவளிக்கும் உன்னதப் பணியைச் செய்யும் விவசாயிகள், தங்களது உரிமைகளுக்காகவும் எதிர்கால தலைமுறைகளின் நலனுக்காகவும் பல்வேறு காலகட்டங்களில் தியாகங்களைச் செய்துள்ளனர் என்றும், அவற்றில் முக்கியமானதாக விளங்கும் இந்த வரலாற்றுத் தியாகம் விவசாயிகளின் ஒற்றுமை, உறுதி மற்றும் போராட்ட மனப்பான்மையின் அடையாளமாக இன்று வரை நினைவுகூரப்படுவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
சாதி, மத, மொழி வேறுபாடுகளைத் தாண்டி விவசாயம் என்ற பொதுவான உயிர்நாடியைப் பாதுகாக்க ஒன்றுபட்ட தியாகிகளின் அர்ப்பணிப்பு இன்றைய தலைமுறைக்கும் முன்னுதாரணமாக உள்ளது என்றும், அவர்களின் தியாகம் வீணாகாமல் விவசாயிகளின் உரிமைகள் பாதுகாக்கப்பட்டு, விவசாயம் லாபகரமான தொழிலாக மாறுவதற்கான அனைத்து முயற்சிகளும் தொடர்ந்து முன்னெடுக்கப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.
மேலும், ஜூன் 19 ஆம் தேதி பெருமாநல்லூரில் நடைபெறும் விவசாய தியாகிகள் நினைவேந்தல் நிகழ்வை மனதார வரவேற்பதாகவும், அதில் கலந்து கொண்டு தியாகிகளின் நினைவைப் போற்றும் அனைவருக்கும் தனது பாராட்டுகளைத் தெரிவித்துக் கொள்வதாகவும் கூறியுள்ளார்.
விவசாயிகளின் நலனே நாட்டின் நலன்,விவசாயத்தின் வளமே இந்தியாவின் வளம் என்றும், உயிர்த் தியாகம் செய்த அந்த மூன்று விவசாய மாவீரர்களின் நினைவு என்றும் மக்களின் நெஞ்சங்களில் நிலைத்திருக்கும் என்றும் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
Hindusthan Samachar / P YUVARAJ