“ரன் ஃபார் யோகா” விழிப்புணர்வு நிகழ்வு - உத்தரகாண்ட் முதல்வர் புஷ்கர் சிங் தாமி பங்கேற்பு
டேராடூன், 19 ஜூன் (ஹி.ச) சர்வதேச யோகா தினம் ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 21 அன்று அனுசரிக்கப்படுகிறது. டிசம்பர் 11, 2014 அன்று ஐ.நா. பொதுச்சபையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தைத் தொடர்ந்து இது அறிவிக்கப்பட்டது. 2015-ல் முதல் முறையாகக் கொண்டாடப்பட்டதி
“Run for Yoga”: Yoga awareness event


டேராடூன், 19 ஜூன் (ஹி.ச)

சர்வதேச யோகா தினம் ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 21 அன்று அனுசரிக்கப்படுகிறது. டிசம்பர் 11, 2014 அன்று ஐ.நா. பொதுச்சபையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தைத் தொடர்ந்து இது அறிவிக்கப்பட்டது.

2015-ல் முதல் முறையாகக் கொண்டாடப்பட்டதிலிருந்து, ஆயுஷ் அமைச்சகத்தின் தலைமையில், மாநில அரசுகள், வெளிநாடுகளில் உள்ள இந்தியத் தூதரகங்கள் மற்றும் சர்வதேச அமைப்புகளின் ஆதரவுடன் இந்தியா உலகளாவிய கொண்டாட்டங்களை முன்னின்று நடத்தி வருகிறது.

இந்த ஆண்டு நிகழ்வுகளுக்கு முன்னதாக, உலகெங்கிலும் உள்ள இந்தியத் தூதரகங்கள், புலம்பெயர் இந்தியர்கள் மற்றும் உள்ளூர் சமூகங்களை ஈடுபடுத்தி யோகா குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் நிகழ்ச்சிகளை நடத்தி வருகின்றன.

அந்த வகையில் 12-வது சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு, உத்தரகாண்ட் முதல்வர் புஷ்கர் சிங் தாமி, இன்று டேராடூனில் உள்ள காவல் வளாகத்தில் நடைபெற்ற “ரன் ஃபார் யோகா” நிகழ்வில் பங்கேற்றார்.

நிகழ்வில் பேசிய முதல்வர் புஷ்கர் சிங் கூறுகையில்,

இது வெறும் ஓட்டம் அல்ல; ஆரோக்கியமான வாழ்க்கை முறை, நேர்மறை சிந்தனை ஆகியவற்றை ஊக்குவித்து, யோகாவின் செய்தியை மக்களிடம் கொண்டு சேர்க்கும் ஒரு வலுவான பிரச்சாரம். யோகா குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தவும், ஆரோக்கியமான சமூகத்தை உருவாக்கவும் இந்த முயற்சி முக்கியமான படி.

தேவபூமியான உத்தரகாண்ட் நீண்ட காலமாக யோகா, ஆன்மிகப் பயிற்சிகள் மற்றும் முனிவர்களின் தவத்திற்குப் பெயர் பெற்ற மையமாக விளங்குகிறது. மாநிலத்தின் வளமான ஆன்மிகப் பாரம்பரியமும் இயற்கைச் சூழலும் ஆரோக்கியம், சமநிலை, நேர்மறை வாழ்க்கை ஆகியவற்றின் செய்தியை மனிதகுலத்திற்குத் தொடர்ந்து ஊக்கமளித்து வருகின்றன.

யோகா என்பது இந்தியாவின் பழமையான கலாச்சாரப் பாரம்பரியம். உடல், மனம், ஆன்மா ஆகியவற்றுக்கு இடையே நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் ஒரு விஞ்ஞானபூர்வமான, நடைமுறை சார்ந்த ஒழுக்கமுறை.

யோகாவிற்கு உலகளாவிய அங்கீகாரம் கிடைத்ததற்கு பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையும் முயற்சிகளும் காரணம். 2014-ல் ஐக்கிய நாடுகள் பொதுச்சபையில் மோடி முன்வைத்த முன்மொழிவுக்குப் பிறகு, ஜூன் 21 சர்வதேச யோகா தினமாக அறிவிக்கப்பட்டது. 190-க்கும் மேற்பட்ட நாடுகளில் கோடிக்கணக்கான மக்கள் யோகா பயிற்சி செய்து வருகின்றது.

மன அழுத்தம், மனச்சோர்வு மற்றும் பிற உடல்நலப் பிரச்சினைகள் அதிகரித்து வரும் நிலையில், ஆரோக்கியமான, சமநிலையான வாழ்க்கை முறையைப் பேணுவதற்கு யோகா ஒரு பயனுள்ள கருவியாக உருவெடுத்துள்ளது. இளைஞர்கள் யோகாவையும் வழக்கமான உடற்பயிற்சியையும் தங்கள் அன்றாட வாழ்வில் இணைத்துக்கொள்ள வேண்டும்.ஆரோக்கியமான, ஆற்றல்மிக்க, ஒழுக்கமான இளைஞர்களே மாநிலத்திற்கும் நாட்டிற்கும் ஒளிமயமான எதிர்காலத்தின் அடித்தளம்.

உத்தரகாண்டை யோகா, ஆயுர்வேதம், ஆரோக்கியம் மற்றும் இயற்கை மருத்துவத்திற்கான உலகளாவிய மையமாக நிலைநிறுத்த மாநில அரசு தீவிரமாகச் செயல்பட்டு வருகின்றது. அரசின் புதிய யோகா கொள்கை, யோகா மற்றும் தியான மையங்களுக்கு ஆதரவளிப்பதுடன், யோகா பயிற்றுநர்களுக்கு உதவி செய்து, இத்துறைகளில் வேலைவாய்ப்புகளை உருவாக்குகின்றது.

குடிமக்கள் தினமும் யோகாவைக் கடைப்பிடித்து, ஆரோக்கியமான, ஒழுக்கமான வாழ்க்கை வாழ வேண்டும் என்று முதல்வர் வேண்டுகோள் விடுத்தார். போதைப்பொருள் இல்லாத சமூகத்தை உருவாக்குவதிலும், யோகாவின் செய்தியை சமூகத்தின் அனைத்துப் பிரிவுகளுக்கும் கொண்டு செல்வதிலும் பங்களிக்க வேண்டும்.

யோகாவை மக்கள் இயக்கமாக முன்னெடுத்துச் செல்வதில் உத்தரகாண்ட் இளைஞர்கள் முக்கியப் பங்கு வகிப்பார்கள். ஆரோக்கியமான, செழிப்பான, வலிமையான மாநிலத்தை உருவாக்க உதவுவார்கள்.

இவ்வாறு அவர் கூறினார்.

Hindusthan Samachar / vidya.b