மேகதாது அணைக்கு எதிரான தீர்மானத்தை திமுக சார்பில் மனதார வரவேற்கிறோம் - உதயநிதி ஸ்டாலின்
சென்னை, 19 ஜூன் (ஹி.ச.) தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடரின் 2-வது நாளான இன்று மேகதாது விவகாரத்தில் கர்நாடகா நடவடிக்கையை எதிர்த்து முதல்வர் விஜய் தனித் தீர்மானத்தை முன்மொழிந்தார். இது குறித்து எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் சட்டப்பேரவையி
மேகதாது அணைக்கு எதிரான  தீர்மானத்தை திமுக சார்பில் மனதார வரவேற்கிறோம் - உதயநிதி ஸ்டாலின்


சென்னை, 19 ஜூன் (ஹி.ச.)

தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடரின் 2-வது நாளான இன்று மேகதாது விவகாரத்தில் கர்நாடகா நடவடிக்கையை எதிர்த்து முதல்வர் விஜய் தனித் தீர்மானத்தை முன்மொழிந்தார்.

இது குறித்து எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் சட்டப்பேரவையில் கூறியதாவது,

மேகதாதுவில் அணை கட்டப்படக்கூடாது என்பதுதான் திமுகவின் உறுதியான நிலைப்பாடு.

காவிரி விவகாரத்தில் முன்னாள் முதல்வர் கருணாநிதி பல்வேறு சட்டப் போராட்டங்களை நடத்தியுள்ளார். இதை இந்த அவையில் இருக்கக்கூடிய மூத்த உறுப்பினர்கள் அனைவரும் அறிவார்கள்.

ஒரு நீண்ட நெடிய சட்ட, அரசியல் போராட்டங்களை நடத்தி தான் நாம் காவிரி மீதான உரிமையை பெற்றெடுத்தோம். ஆனால் அதைப் பறிக்கும் வகையில் கர்நாடக அரசு, மேகதாதுவில் அணை கட்டும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறது.

எங்களுடைய கூட்டணியில் இருந்த கட்சி, கர்நாடகவில் ஆட்சியில் இருந்தாலும் மேகதாது அணை கட்டும் திட்டத்துக்கு, முன்னாள் முதல்வர் ஸ்டாலின் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்தார். அணை திட்டத்திற்காக ரூ.1000 கோடி கர்நாடக அரசு ஒதுக்கியதைக் கண்டித்து, இதே அவையில் தீர்மானம் நிறைவேற்றியது திமுக அரசு.

2021ஆம் ஆண்டு நாங்கள் ஆட்சிக்கு வந்த அடுத்த மாதமே, மேகதாது அணை கட்ட அனுமதிக்கக் கூடாது என பிரதமருக்கு முதல்வராக இருந்த மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதினார்.

பிறகு அதே கருத்தை வலியுறுத்தி, அதற்கு அடுத்த மாதமே ஜல்சக்தி துறை அமைச்சருக்கும் கடிதம் எழுதினார்.

அனைத்து சட்டமன்றக் கட்சித் தலைவர்களைக் கூட்டி, மேகதாது அணையை கட்ட அனுமதிக்கக்கூடாது என தீர்மானம் நிறைவேற்றினோம். அத்தீர்மானத்தை ஒன்றிய அமைச்சரிடம் நேரில் சென்றும் வலியுறுத்தியிருக்கிறோம்.

2022 - 2023 நிதியாண்டில் மேகதாது அணைக்கு கர்நாடக அரசு ஒதுக்கிய நிதியைக் கண்டித்து, சட்டப்பேரவையில் அரசினர் தனித்தீர்மானம் நிறைவேற்றினோம். தமிழ்நாட்டின் உரிமைகளை காக்க நாம் அனைவரும் ஒன்றுபட்டு நிற்போம் என்று முன்னாள் முதல்வர் மு.க.ஸ்டாலின். செயல்பட்டார்.

இப்படி, திமுக தமிழ்நாட்டின் தொடர் எதிர்ப்பை பதிவு செய்ததன் காரணமாகதான் இதுவரை மேகதாது அணை கட்டப்படவில்லை. மேகதாது அணை கட்டும் கர்நாடகாவின் முயற்சிக்கு எதிராக முதல்வர் கொண்டுவந்துள்ள தீர்மானத்தை திமுக சார்பில் மனதார வரவேற்கிறோம்.

கர்நாடகா, மேகதாது அணை கட்டுவதை தடுக்க சட்டரீதியாகவும், பிரதமர் மூலமாகவும் இந்த அரசு எடுக்கின்ற அனைத்து முயற்சிகளுக்கும் திமுக நிச்சயம் துணை நிற்கும்.

மேகதாது அணை கட்ட முயற்சிக்கும் கர்நாடக அரசை நாம் அனைவரும் சேர்ந்து ஒற்றுமையாக இருந்து தடுத்து நிறுத்துவோம். இந்த ஆண்டு ஜூன் 12-ம் தேதி மேட்டூர் அணை திறக்காததால், டெல்டா விவசாயிகள் சிரமத்தில் இருக்கிறார்கள். குறுவை சாகுபடி பாதிக்கப்பட்டுள்ளது. அடுத்த காவிரி ஆணைய கூட்டத்தில் தமிழ்நாடு அரசு உறுதியாகப் பேசி, நமக்கான நீர் பங்கீட்டை பெற வேண்டும்.

இந்தத் தீர்மானத்தை கடிதம் மூலமாக ஒன்றிய அரசுக்கு அனுப்பி வைப்பதற்கு பதிலாக, தமிழகத்தின் அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களும், நாடாளுமன்ற உறுப்பினர்களும் இணைந்து ஒரு குழுவாக சென்று ஒன்றிய அரசிடம் இதை கொடுத்து நமது ஒற்றுமையை வெளிப்படுத்த வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.

அதற்கு திமுக தயாராக இருக்கிறது,அரசியல் வேறுபாடுகளை எல்லாம் கடந்து இந்த அரசும் முன் வரவேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம்

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Hindusthan Samachar / vidya.b