Enter your Email Address to subscribe to our newsletters

திண்டுக்கல், 19 ஜூன் (ஹி.ச)
திண்டுக்கல் மாவட்டம், நத்தம் அருகே செயல்பட்டு வரும் தனியார் கல்குவாரியால் பள்ளிக்குச் செல்லும் குழந்தைகள் கடும் பாதிப்புக்கு உள்ளாவதாகக் கூறி, அந்த குவாரியை உடனடியாக மூட வேண்டும் என வலியுறுத்தி கிராம மக்கள் இன்று சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பள்ளி மாணவ, மாணவிகளுடன் ஒன்றுதிரண்ட பொதுமக்கள், குவாரியில் இருந்து கற்களை ஏற்றிச் சென்ற லாரி ஒன்றை சிறைப்பிடித்து சாலையில் அமர்ந்து திடீர் மறியலில் ஈடுபட்டதால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
கனரக வாகனங்கள் தொடர்ந்து செல்வதால் புழுதி, சத்தம் மற்றும் விபத்து அபாயம் காரணமாக குழந்தைகளின் உடல்நலமும் பாதுகாப்பும் கேள்விக்குறியாகி உள்ளதாகவும், பலமுறை புகார் அளித்தும் நடவடிக்கை இல்லை எனவும் போராட்டக்காரர்கள் குற்றம்சாட்டினர்.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த வருவாய் மற்றும் காவல்துறை அதிகாரிகள், பொதுமக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.
குவாரி செயல்பாடுகள் குறித்து முறையான ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் உறுதியளித்ததை அடுத்து, போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் அமைதியாகக் கலைந்து சென்றனர்.
இந்த சம்பவத்தால் சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
Hindusthan Samachar / vidya.b