Enter your Email Address to subscribe to our newsletters


சென்னை, 19 ஜூன் (ஹி.ச.)
கர்நாடக மாநிலம் காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாது அணை கட்ட மத்திய அரசு அனுமதிக்கக்கூடாது என்பதை வலியுறுத்தி தமிழ்நாடு சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ள தனித்தீர்மானத்தை முழு மனதோடு வரவேற்பதாக வி.கே. சசிகலா தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,
தமிழக விவசாயிகளின் நலனுக்கு முற்றிலும் விரோதமாக செயல்பட்டு வரும் காங்கிரஸ் தலைமையிலான கர்நாடக அரசுக்கு தனது கடும் கண்டனத்தை தெரிவித்துக் கொண்டுள்ளார். மேகதாது அணை முயற்சி இரு மாநில மக்களின் ஒற்றுமை மற்றும் சகோதரத்துவத்தை பாதிக்கும் செயல் என்றும், தமிழகத்தின் ஜீவாதார உரிமை பறிபோனால் விவசாயிகளின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
தமிழகம் ஒரு வடிகால் மாநிலமாக இருப்பதால், தமிழகத்தில் இயற்கையாகப் பாயும் நீரை தடுக்க யாருக்கும் அதிகாரம் இல்லை என்றும், இது போன்ற நடவடிக்கைகள் இயற்கை நீதிக்கும், உச்சநீதிமன்றம் வழங்கியுள்ள சட்டப் பாதுகாப்புகளுக்கும் எதிரானவை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
காவிரி நடுவர் மன்றத் தீர்ப்பு, உச்சநீதிமன்றத் தீர்ப்பு மற்றும் காவிரி நீர் மேலாண்மை அமைப்புகளின் விதிகளின்படி, தமிழ்நாட்டின் ஒப்புதல் இன்றி மேகதாது அணைத் திட்டத்தை செயல்படுத்த முடியாது என்றும் வலியுறுத்தியுள்ளார்.
மேலும், காவிரி நதி நீர் பிரச்சினையில் தமிழகத்திற்கு தேவையான சட்டப் பாதுகாப்புகளை பெற்றுத் தந்ததில் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் பங்கு முக்கியமானது என்றும், அவரது தொடர் சட்டப் போராட்டங்களின் விளைவாகவே காவிரி மேலாண்மை ஆணையம் மற்றும் காவிரி ஒழுங்காற்றுக் குழு அமைக்கப்பட்டதாகவும் சசிகலா குறிப்பிட்டுள்ளார்.
அதேபோல், மேட்டூர் அணையிலிருந்து பாசனத்திற்காக திறக்கப்பட வேண்டிய நீர் இன்னும் திறக்கப்படாததால் டெல்டா மாவட்டங்களில் குறுவை சாகுபடி பாதிக்கப்பட்டுள்ளதாகவும், தமிழகத்திற்கு உரிய காவிரி நீரை முழுமையாக பெற்றுத் தர தமிழக அரசு தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டுள்ளார்.
இறுதியாக, தமிழக அரசு எந்தவித சமரசத்திற்கும் இடமளிக்காமல், தமிழக விவசாயிகளின் நலனை முன்னிறுத்தி மேகதாது அணைத் திட்டத்தை முன்னெடுக்க கர்நாடக அரசு மேற்கொள்ளும் அனைத்து முயற்சிகளையும் சட்டரீதியாக முறியடிக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.
இவ்வாறு வி.கே. சசிகலா தனது எக்ஸ் தளப் பதிவில் தெரிவித்துள்ளார்.
Hindusthan Samachar / P YUVARAJ