Enter your Email Address to subscribe to our newsletters

புதுடெல்லி, 20 ஜூன் (ஹி.ச.)
இளநிலை மருத்துவம், பல் மருத்துவம் உள்ளிட்ட மருத்துவ படிப்புகளுக்கான தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வான நீட் மறுதேர்வு, நாளை ஜூன் 21-ம் தேதி நாடு முழுவதும் பலத்த பாதுகாப்புடன் நடைபெற உள்ளது.
கடந்த மே 3-ம் தேதி நடத்தப்பட்ட நீட் தேர்வின் வினாத்தாள் பல மாநிலங்களில் கசிந்ததாக புகார்கள் எழுந்ததை அடுத்து, அந்த தேர்வை தேசிய தேர்வு முகமை (NTA) ரத்து செய்தது.
வினாத்தாள் கசிவு தொடர்பாக நடைபெற்ற விசாரணையில் முறைகேடுகள் உறுதி செய்யப்பட்டதால், லட்சக்கணக்கான மாணவர்களின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு மறுதேர்வு நடத்த முடிவு செய்யப்பட்டது.
இதன்படி ஜூன் 21-ம் தேதி மறுதேர்வு நடைபெறும் என்று தேசிய தேர்வு முகமை ஏற்கெனவே அறிவித்திருந்தது.
தேர்வு மையங்களில் கண்காணிப்பு கேமராக்கள், ஜாமர்கள், காவல்துறை பாதுகாப்பு உள்ளிட்ட பல அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
மாணவர்கள் தேர்வு மையங்களுக்கு வரும்போது கடுமையான சோதனைக்கு உட்படுத்தப்படுவார்கள்.
வினாத்தாள் மற்றும் விடைத்தாள் கையாளுதலில் முறைகேடுகள் நடைபெறாமல் இருக்க கூடுதல் கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
தமிழ்நாடு உட்பட நாடு முழுவதும் சுமார் 24 லட்சம் மாணவர்கள் இந்த மறுதேர்வை எழுத உள்ளனர்.
தேர்வுக்கான அனுமதி அட்டைகள் ஏற்கெனவே வெளியிடப்பட்டு, மாணவர்கள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட மையங்களுக்கு செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
Hindusthan Samachar / vidya.b