தன்னைக் கொல்ல சதி நடப்பதாக தேஜ் பிரதாப் யாதவ் புகார் - பீகார் அரசியலில் பரபரப்பு
பாட்னா, 20 ஜூன் (ஹி.ச.) பீகார்ர் மாநிலத்தில் உள்ள ஜன ஜாக்ருதி தளம் (JJD) தலைவர் தேஜ் பிரதாப் யாதவ் தன்னையும் தனது தந்தை லாலு பிரசாத் யாதவையும் கொலை செய்ய சதித்திட்டம் தீட்டப்படுவதாக பரபரப்பு புகார் அளித்துள்ளார். இன்று பாட்னாவில் உள்ள தலைமை
தன்னைக் கொல்ல சதி நடப்பதாக தேஜ் பிரதாப் யாதவ் புகார் - பீகார் அரசியலில் பரபரப்பு


பாட்னா, 20 ஜூன் (ஹி.ச.)

பீகார்ர் மாநிலத்தில் உள்ள ஜன ஜாக்ருதி தளம் (JJD) தலைவர் தேஜ் பிரதாப் யாதவ் தன்னையும் தனது தந்தை லாலு பிரசாத் யாதவையும் கொலை செய்ய சதித்திட்டம் தீட்டப்படுவதாக பரபரப்பு புகார் அளித்துள்ளார்.

இன்று பாட்னாவில் உள்ள தலைமைச் செயலக காவல் நிலையத்தில் அவர் இந்த புகாரை பதிவு செய்தார்.

ராஷ்ட்ரிய ஜனதா தளம் (RJD) மாணவர் அணியின் முன்னாள் தலைவர் ஆகாஷ் யாதவ் உட்பட எட்டு பேர் மீது தேஜ் பிரதாப் யாதவ் குற்றம்சாட்டியுள்ளார்.

தனக்கு ஆகாஷ் யாதவ் சார்பில் கொலை மிரட்டல் விடுக்கப்பட்டதாகவும், சம்பந்தப்பட்ட அனைவரின் பெயர்களும் முதல் தகவல் அறிக்கையில் (FIR) பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

புகார் அளித்த பின் செய்தியாளர்களிடம் பேசிய தேஜ் பிரதாப்

தொடக்கத்தில் இருந்தே என் பெயருக்கு களங்கம் விளைவிக்க தொடர் முயற்சிகள் நடந்து வருகின்றன. என் தந்தை லாலு பிரசாத் யாதவ் உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டுள்ளார். இந்த நிலையில் என்னையும் என் தந்தையையும் கொலை செய்ய சதி நடக்கிறது. ஆகாஷ் யாதவ் என்னை கொலை செய்ய திட்டமிடுகிறார் என்று குற்றஞ்சாட்டினார்.

எதிர்க்கட்சியுடன் கூட்டு சேர்ந்து ஆகாஷ் யாதவ் என்னை கொலை செய்ய முயற்சிக்கலாம். சமீபத்தில் நான்கு பேர் அத்துமீறி எனது வீட்டிற்குள் நுழைந்தனர். நாங்கள் அவர்களைப் பிடிக்க முயன்றபோது தப்பி ஓடிவிட்டனர்

எனது பாதுகாப்பு குறித்த அச்சத்தை அதிகரித்துள்ளது.எனக்கு உடனடியாக பாதுகாப்பு வழங்க வேண்டும். இது தொடர்பாக ஏற்கெனவே நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளேன்.

விவகாரத்தின் தீவிரத்தை கருத்தில் கொண்டு அதிகாரிகள் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும். தேவைப்பட்டால் முதலமைச்சரை நேரில் சந்தித்து முறையிடத் தயாராக உள்ளேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

தலைமைச் செயலக காவல் நிலையத்தில் புகார் பதிவு செய்யப்பட்டு, தொடர்புடைய அனைத்து நபர்களின் பெயர்களும் FIR-ல் இடம்பெற்றுள்ளதாக காவல்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இந்த புகார் பீகார் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Hindusthan Samachar / vidya.b