Enter your Email Address to subscribe to our newsletters

லக்னோ, 20 ஜூன் (ஹி.ச)
ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 21 அன்று கொண்டாடப்படும் சர்வதேச யோகா தினம், முக்கிய அம்சமாக திகழ்கிறது.
பிரதமர் நரேந்திர மோடியின் முன்மொழிவைத் தொடர்ந்து 2014-ஆம் ஆண்டு ஐக்கிய நாடுகள் பொதுச் சபை இந்த நாளை அங்கீகரித்தது. அன்று முதல் இது உலகளாவிய இயக்கமாக வளர்ச்சி பெற்றுள்ளது.
அந்த வகையில் 12ஆவது சர்வதேச யோகா தினத்தை (IDY) முன்னிட்டு நாளை
(ஜூன் 21, 2026) இந்தியா முழுவதும் முன்னேற்பாடுகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன.
நாட்டின் பல்வேறு மாநிலங்களில் பெரிய அளவிலான கவுண்ட்டவுன் நிகழ்ச்சிகளும், சிறப்பு யோகா பயிற்சி அமர்வுகளும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
ஆயிரக்கணக்கான யோகா ஆர்வலர்களும் பொதுமக்களும் கொண்டாட்டத்திற்கு முன்னதாக நடைபெறும் நிகழ்வுகளில் பங்கேற்று வருகின்றனர்.
இந்த ஆண்டு யோகா தினத்தின் கருப்பொருள் “ஆரோக்கியமான முதுமைக்கு யோகா”
(Yoga for Healthy Ageing) என அறிவிக்கப்பட்டுள்ளது.
முதுமை காலத்தில் சுறுசுறுப்பாகவும், தன்னிச்சையாகவும், ஈடுபாட்டுடனும் வாழ யோகா எவ்வாறு உதவுகிறது என்பதை இது வலியுறுத்துகிறது. அனைத்து வயதினருக்கும் யோகாவின் பயன்களை எடுத்துரைப்பதே இதன் நோக்கமாகும்.
தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் உள்ள பரேட் மைதானத்தில் 24 மணி நேர கவுண்ட்டவுன் நிகழ்ச்சி நடைபெற்றது.
மத்திய நிலக்கரி மற்றும் சுரங்கத்துறை அமைச்சர் ஜி. கிஷன் ரெட்டி தலைமையில் நடந்த இந்நிகழ்ச்சியில் ஆளுநர் சிவ் பிரதாப் சுக்லா சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.
மேற்கு வங்கத்தில் கொல்கத்தாவின் ரெட் ரோடு பகுதியில் தயாரிப்புகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன.
ஜம்மு காஷ்மீரில், ராம்பன் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில், துணை ஆணையர் முகமது அலியாஸ் கான் தலைமையில் சனாசார் பகுதியில் பிரம்மாண்ட யோகா அமர்வு நடத்தப்பட்டது.
ஸ்ரீநகரில், போக்ரிபால் ஏரியில் நீர் விளையாட்டு வீரர்கள் மிதக்கும் யோகா செய்து கவனத்தை ஈர்த்தனர்.
உத்தரப் பிரதேசத்தில், இன்று லக்னோவில் உள்ள கே.டி. சிங் பாபு மைதானத்தில் நடைபெற்ற பெரிய யோகா முகாமில் துணை முதல்வர் பிரஜேஷ் பதக் கலந்து கொண்டார்.
Hindusthan Samachar / vidya.b