புதுச்சேரியில் அமைச்சர்களுக்கு துறைகள் ஒதுக்குவதில் தொடரும் சிக்கல்
புதுச்சேரி, 20 ஜூன் (ஹி.ச.) புதுச்சேரியில் மொத்தம் உள்ள 30 தொகுதிகளுக்கு ஏப்ரல் 9, 2026 அன்று வாக்குப்பதிவு நடைபெற்று, மே 4, 2026 அன்று அதிகாரப்பூர்வ முடிவுகள் வெளியிடப்பட்டன. முதல்வர் ந. ரங்கசாமி தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி (NDA) 18 இ
allotment of portfolios to Ministers in Puducherry continues


புதுச்சேரி, 20 ஜூன் (ஹி.ச.)

புதுச்சேரியில் மொத்தம் உள்ள 30 தொகுதிகளுக்கு ஏப்ரல் 9, 2026 அன்று வாக்குப்பதிவு நடைபெற்று, மே 4, 2026 அன்று அதிகாரப்பூர்வ முடிவுகள் வெளியிடப்பட்டன.

முதல்வர் ந. ரங்கசாமி தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி (NDA) 18 இடங்களைக் கைப்பற்றி மீண்டும் ஆட்சியைத் தக்கவைத்துள்ளது.

கடந்த மே 13 அன்று முதலமைச்சருடன் இரண்டு அமைச்சர்கள் மட்டும் முதற்கட்டமாகப் பதவியேற்ற நிலையில், கடந்த ஜூன் 17 ஆம் தேதி மேலும் 3 புதிய அமைச்சர்கள் பதவியேற்றுக் கொண்டனர். இதன் மூலம் புதுச்சேரி அரசின் 6 உறுப்பினர்களைக் கொண்ட முழு அமைச்சரவையும் நிறைவடைந்துள்ளது.

புதிதாகப் பதவியேற்ற மூன்று அமைச்சர்களுக்கான அரசுத் துறைகள் (இலாகாக்கள்) முதலமைச்சரின் பரிந்துரையின் பேரில் விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட உள்ளன.

புதுச்சேரி மாநிலத்தில் புதிய அமைச்சரவை பதவியேற்று பல நாட்கள் ஆகியும், அமைச்சர்களுக்கான துறைகள் ஒதுக்கீடு இன்னும் முடிவுக்கு வராமல் இழுபறி நீடித்து வருகிறது.

என்.ஆர். காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி அரசில் பாஜகவும் அங்கம் வகிக்கும் நிலையில், இரு கட்சிகளுக்கு இடையே முக்கிய துறைகளை கைப்பற்றுவதில் கடும் போட்டி நிலவுகிறது.

உள்துறை, கல்வி, பொதுப்பணி உள்ளிட்ட முக்கியமான துறைகளை தங்கள் வசம் வைத்துக்கொள்ள பாஜக தரப்பு தீவிரமாக வலியுறுத்தி வருவதாக தலைமைச் செயலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

குறிப்பாக, கடந்த ஆட்சிக்காலத்தில் பாஜக வசம் இருந்த உள்துறையை இம்முறையும் தங்களுக்கே ஒதுக்க வேண்டும் என அக்கட்சி உறுதியாக உள்ளது.

ஆனால் முதலமைச்சர் ரங்கசாமி, உள்துறை போன்ற முக்கிய துறைகளை பாஜகவுக்கு விட்டுக்கொடுக்க மறுத்து வருவதாக கூறப்படுகிறது.

சட்டம்-ஒழுங்கு உள்ளிட்ட நிர்வாக ரீதியாக மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்த உள்துறையை தனது நேரடி கட்டுப்பாட்டிலேயே வைத்திருக்க ரங்கசாமி விரும்புகிறார்.

இதனால் இரு தரப்புக்கும் இடையே உடன்பாடு எட்டப்படாமல் இழுபறி நீடிக்கிறது.

இந்த சிக்கலுக்கு தீர்வு காணும் வகையில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, முதலமைச்சர் ரங்கசாமியுடன் தொலைபேசி வாயிலாக பேச்சுவார்த்தை நடத்தியதாக தகவல் வெளியாகியுள்ளது. எனினும், இந்த பேச்சுவார்த்தையிலும் சுமுக முடிவு எட்டப்படவில்லை என்று கூறப்படுகிறது.

துறைகள் ஒதுக்கீடு தாமதமாவதால் அரசு நிர்வாகப் பணிகள் முடங்கும் நிலை ஏற்பட்டுள்ளது. புதிய திட்டங்களை செயல்படுத்துவதிலும், கோப்புகளுக்கு ஒப்புதல் அளிப்பதிலும் காலதாமதம் ஏற்படுவதாக அதிகாரிகள் மட்டத்தில் கவலை எழுந்துள்ளது.

இரு கட்சிகளும் விரைவில் ஒருமித்த கருத்துக்கு வந்து துறைகளை பகிர்ந்துகொள்ள வேண்டும் என அரசியல் விமர்சகர்கள் வலியுறுத்துகின்றனர்.

Hindusthan Samachar / vidya.b