லக்னோ தீ விபத்தில் 15 பேர் உயிரிழந்த விவகாரம் - 16 சட்டவிரோத பயிற்சி நிலையங்களுக்கு சீல்
லக்னோ, 23 ஜூன் (ஹி.ச.) உத்தரபிரதேச மாநிலம் லக்னோவில் ஏற்பட்ட தீ விபத்தைத் தொடர்ந்து, கான்பூர் வளர்ச்சி ஆணையம் (KDA) விதிகளை மீறி செயல்பட்டு வந்த 16 பயிற்சி நிலையங்கள் மற்றும் வணிக நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுத்து சீல் வைத்துள்ளது. மேலும் 22 நிற
16 illegal coaching centres sealed


லக்னோ, 23 ஜூன் (ஹி.ச.)

உத்தரபிரதேச மாநிலம் லக்னோவில் ஏற்பட்ட தீ விபத்தைத் தொடர்ந்து, கான்பூர் வளர்ச்சி ஆணையம் (KDA) விதிகளை மீறி செயல்பட்டு வந்த 16 பயிற்சி நிலையங்கள் மற்றும் வணிக நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுத்து சீல் வைத்துள்ளது.

மேலும் 22 நிறுவனங்கள் மீது தொடர் நடவடிக்கைக்காக அடையாளம் காணப்பட்டுள்ளன.

நேற்று லக்னோவில் நேரிட்ட தீ விபத்தில் குறைந்தது 15 பேர் உயிரிழந்தனர், பலர் காயமடைந்தனர். இதையடுத்தே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இன்று வெளியிடப்பட்ட அதிகாரப்பூர்வ அறிக்கையின்படி, நேற்று நகரின் பல்வேறு மண்டலங்களில் உள்ள 16 நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டது.

முதல் கட்ட நடவடிக்கையில் மேலும் 22 நிறுவனங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும், அடையாளம் கண்டு சீல் வைக்கும் பணி தொடர்ந்து நடைபெறும் என்றும் ஆணையம் தெரிவித்துள்ளது.

இதற்கிடையே, லக்னோ போலீசார் அலிகஞ்ச் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் தீ விபத்து ஏற்பட்ட கட்டடத்திற்கு சீல் வைத்துள்ளனர்.

தடயவியல் மற்றும் தீயணைப்புத் துறை குழுக்கள் ஆதாரங்களை சேகரித்து வருவதால் பொதுமக்கள் அணுகல் தடை செய்யப்பட்டுள்ளது.

தீ விபத்துக்கான காரணம் இன்னும் கண்டறியப்படவில்லை.

இந்தச் சம்பவம் தொடர்பாக அலிகஞ்ச் காவல் நிலையத்தில் பாரதிய நியாய சன்ஹிதா (BNS) பிரிவுகள் 110, 105, 125 மற்றும் 3(5), உத்தரப் பிரதேச தீயணைப்புச் சேவை சட்டத்தின் பிரிவுகள் 6 மற்றும் 10 ஆகியவற்றின் கீழ் முதல் தகவல் அறிக்கை (FIR) பதிவு செய்யப்பட்டுள்ளது. FIR-ல் ஆறு பேர் குற்றவாளிகளாகவும், மற்ற பொறுப்பான நபர்களின் பெயர்களும் சேர்க்கப்பட்டுள்ளன.

வழக்கு தொடர்பாக ராம்கிருஷ்ண உபாத்யாய், வீரேந்திர சுக்லா, துஷாங்க் கிருஷ்ண ஜெய்ஸ்வால் ஆகிய மூவரை போலீசார் கைது செய்துள்ளனர்.

மருத்துவப் பரிசோதனைக்குப் பின்னர் குற்றம்சாட்டப்பட்டவர்கள் காவல் நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.

இந்தச் சம்பவத்தில் தொடர்புடைய மேலும் குற்றவாளிகளைக் கண்டறியும் முயற்சியில் விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

Hindusthan Samachar / vidya.b