Enter your Email Address to subscribe to our newsletters

விழுப்புரம், 24 ஜூன் (ஹி.ச)
பாமக நிறுவனர் ராமதாஸ் தனது மகன் அன்புமணி செயல்பாடுகளால்,அதிருப்தி அடைந்து அவரை அக்கட்சியில் இருந்து நீக்கினார்.
இருத்தரப்பினரும் மாறி மாறி குற்றச்சாட்டுகளை முன்வைத்தது அரசியல் வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தியது.
தற்போது ராமதாஸ் மற்றும் அன்புமணி இரண்டு அணிகளாக பிரிந்து செயல்பட்டு வருகின்றனர்.
2026 சட்டமன்ற தேர்தலில் ஒன்றிணைவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டிருந்த நிலையில், அன்புமணி தரப்பு அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் இடம் பிடித்து, சட்டமன்ற தேர்தலில் 17 தொகுதிகளில் போட்டியிட்டு தர்மபுரி, செஞ்சி ,விக்கிரவாண்டி, ஜெயகொண்டம் உள்ளிட்ட நான்கு தொகுதிகளில் வெற்றி பெற்றது.
மறுபுறம் பாமக நிறுவனர் ராமதாஸோ சசிகலாவுடன் புதிய கூட்டணி அமைத்து தேர்தலை சந்தித்தார். இருப்பினும் அவர் 234 தொகுதியிலும் தோல்வியை சந்தித்தார்.
இந்த நிலையில் விழுப்புரம் மாவட்டம் திண்டிவனத்தில் உள்ள தைலாபுரம் தோட்டத்திற்கு பாமகவின் தலைவர் அன்புமணி வருகை புரிந்துள்ளார். இன்னும் சற்று நேரத்தில் ராமதாஸை சந்திக்க இருப்பதாகக் கூறப்படுகிறது.
இதனால் இருவருக்கும் இடையே இருந்த அரசியல் முரண் என்பது முடிவுக்கு வர இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. அன்புமணியுடன் அவருடைய மனைவி சௌமியா அன்புமணியும் உடன் வந்துள்ளார்.
சட்டமன்ற தேர்தலுக்கு முன்பாக இருவருக்கும் கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டிருந்த நிலையில் தற்போது சட்டமன்றத் தேர்தலுக்கு பிறகு சௌமியா அன்புமணி சட்டமன்ற உறுப்பினராக தேர்வாகி இருக்கும் நிலையில் தற்போது சந்திப்பு நடைபெறுகிறது.
வீட்டிற்கு வரும் அன்புமணிக்கு ஆரத்தி எடுத்து அவருக்கு வரவேற்பளிக்கப்பட்டது. ராமதாஸின் 61 ஆவது திருமண நாளை முன்னிட்டு இந்த சந்திப்பு நடப்பதாகவும் கூறப்படுகிறது.
ராமதாஸ் - அன்புமணி இடையே பிரச்னை ஏற்பட்ட பிறகு முதல் முறையாக சந்திப்பு நடந்துள்ளது அரசியல் வட்டாரத்தில் கவனம் பெற்றுள்ளது.
Hindusthan Samachar / vidya.b