Enter your Email Address to subscribe to our newsletters

விஜயவாடா , 24 ஜூன் (ஹி.ச.)
ஆட்சிக்கு வந்த பிறகு கட்சி தொண்டர்கள் அலட்சியமாக செயல்படுவது கோவிட் நோயை விட ஆபத்தானது என்று ஆந்திரப் பிரதேச மந்திரியும், தெலுங்குதேசம் கட்சியின் தேசிய செயல் தலைவருமான நாரா லோகேஷ் தெரிவித்தார்.
கிருஷ்ணா மாவட்டம் மோபிதேவியில் நடைபெற்ற கட்சி தொண்டர்கள் கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய அவர், எதிர்க்கட்சியாக இருந்தபோது வெளிப்படுத்திய போராட்ட உணர்வையும் அர்ப்பணிப்பையும் ஆட்சியிலும் தொடர்ந்து கடைப்பிடிக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.
சிறிய கருத்து வேறுபாடுகள் அல்லது ஏமாற்றங்களால் தொண்டர்கள் ஒதுங்கி நிற்கக் கூடாது என்றும், அதனால் கட்சிக்கும் மாநில மக்களுக்கும் பாதிப்பு ஏற்படும் என்றும் கூறினார்.
ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி பொய்யான தகவல்கள் மற்றும் தவறான பிரசாரங்களை மேற்கொண்டு வருவதாக குற்றம் சாட்டிய லோகேஷ், அவற்றை கிராம மற்றும் மண்டல அளவிலேயே உடனுக்குடன் முறியடிக்க வேண்டும் என்று தொண்டர்களுக்கு அழைப்பு விடுத்தார். அதே நேரத்தில் கூட்டணி அரசின் வளர்ச்சி மற்றும் நலத்திட்டங்களை மக்களிடம் தீவிரமாக கொண்டு செல்ல வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.
கடந்த ஆட்சியில் கட்சி தொண்டர்கள் பல்வேறு இன்னல்களுக்கு ஆளாக்கப்பட்டதாக கூறிய அவர், அப்போது குறிப்பிட்ட ரெட் புக் தனது பணியைத் தானே செய்யும் என்றும், அதுகுறித்து யாரும் சந்தேகப்பட தேவையில்லை என்றும் தெரிவித்தார்.
கூட்டணி அரசு பதவியேற்ற பின்னர் ரூ.4 ஆயிரம் முதியோர் உதவித்தொகை, பெண்களுக்கு இலவச பஸ் பயணம், தீபம் திட்டத்தின் கீழ் இலவச கியாஸ் சிலிண்டர்கள், ‘தல்லிக்கி வந்தனம்’ திட்ட உதவிகள் உள்ளிட்ட பல்வேறு நலத்திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருவதாக அவர் கூறினார்.
மேலும் மெகா டி.எஸ்.சி. மூலம் 16 ஆயிரம் ஆசிரியர் பணியிடங்களும், வேலைவாய்ப்பு காலண்டர் மூலம் 10 ஆயிரம் அரசு பணியிடங்களும் நிரப்பப்பட்டு வருவதாக தெரிவித்தார்.
தற்போது சிறப்பு கணக்கெடுப்பு பணிகள் நடைபெற்று வருவதால், வீடு தோறும் சென்று மக்களை சந்திக்கும் பிரசார நிகழ்ச்சி ஜூலை 10-ந் தேதி முதல் தொடங்கப்படும் என்றும் லோகேஷ் அறிவித்தார்.
பா.ஜ.க., ஜனசேனா மற்றும் தெலுங்குதேசம் கட்சிகள் இடையிலான கூட்டணி நீண்ட காலம் நீடிக்கும் என்றும், கூட்டணிக்குள் கருத்து மோதல்களுக்கும் பரஸ்பர விமர்சனங்களுக்கும் இடமளிக்கக் கூடாது என்றும் அவர் வலியுறுத்தினார்.
Hindusthan Samachar / M.DEEPAK RAJA