ஆந்திரா - ஜொன்னகிரி தங்க சுரங்கத் திட்டத்தை முதல்வர் சந்திரபாபு நாயுடு தொடங்கி வைக்கிறார்
அமராவதி, 24 ஜூன் (ஹி.ச.) ஆந்திர பிரதேச மாநிலத்தின் சுரங்கம் மற்றும் தொழில் துறையை விரிவுபடுத்தும் முயற்சியின் முக்கிய மைல்கல்லாக, கர்னூல் மாவட்டம் துக்களி மண்டலம் ஜொன்னகிரியில் அமைந்துள்ள தங்க சுரங்கத் திட்டத்தை முதல்வர் நா. சந்திரபாபு நாயுடு இ
ஆந்திரா - ஜொன்னகிரி தங்க சுரங்கத் திட்டத்தை முதல்வர் சந்திரபாபு நாயுடு தொடங்கி வைக்கிறார்


அமராவதி, 24 ஜூன் (ஹி.ச.)

ஆந்திர பிரதேச மாநிலத்தின் சுரங்கம் மற்றும் தொழில் துறையை விரிவுபடுத்தும் முயற்சியின் முக்கிய மைல்கல்லாக, கர்னூல் மாவட்டம் துக்களி மண்டலம் ஜொன்னகிரியில் அமைந்துள்ள தங்க சுரங்கத் திட்டத்தை முதல்வர் நா. சந்திரபாபு நாயுடு இன்று தொடங்கி வைக்கிறார்.

ஆந்திர அரசின் அதிகாரப்பூர்வ செய்திக்குறிப்பின்படி,

முதல்வர் இன்று காலை 11:45 மணிக்கு ஜொன்னகிரியை சென்றடைந்து, தங்க சுத்திகரிப்பு ஆலையின் முதல் அலகை திறந்து வைக்கிறார்.

பின்னர், மதியம் 12:20 மணிக்கு, ஜியோ மைசூர் ஆலையின் விரிவாக்கத்தின் ஒரு பகுதியாக இரண்டாவது அலகுக்கு அடிக்கல் நாட்டுகிறார்.

இந்த நாள் முழுவதுமான பயணத்தின் ஒரு பகுதியாக, இன்று மாலை 3:00 மணிக்கு பொதுக்கூட்டத்தில் உரையாற்றும் முதல்வர், அதனைத் தொடர்ந்து பத்திகொண்டா சட்டமன்றத் தொகுதியின் தெலுங்கு தேசம் கட்சி தலைவர்கள் மற்றும் தொண்டர்களை சந்திக்கிறார்.

ஜியோ மைசூர் சர்வீசஸ் இந்தியா பிரைவேட் லிமிடெட் மற்றும் தக்காண் கோல்ட் மைன்ஸ் லிமிடெட் நிறுவனங்களால் ரூ.405 கோடி முதலீட்டில் இந்தத் திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது.

சுரங்கம் மற்றும் சுத்திகரிப்பு வசதிகளில் சோதனை ஓட்டங்கள் ஏற்கனவே நிறைவடைந்துள்ள நிலையில், முறையான தொடக்க விழாவைத் தொடர்ந்து வணிக உற்பத்தி தொடங்க உள்ளது.

இந்தியாவின் தங்க சுரங்க வரலாறு கர்நாடகாவின் கோலார் தங்க வயல் (KGF) உடன் பின்னிப் பிணைந்துள்ளது. இந்நிலையில், கர்னூல் மாவட்டம் ஜொன்னகிரியில் அமைக்கப்பட்டுள்ள நாட்டின் மிகப்பெரிய தனியார் துறை தங்க சுரங்கத் திட்டத்தின் மூலம், ஆந்திராவின் ஜொன்னகிரி, நாட்டின் தங்க வரைபடத்தில் தனக்கென ஒரு இடத்தைப் பிடிக்க தயாராகி வருவதாக அந்த செய்திக்குறிப்பு தெரிவிக்கிறது.

ஜொன்னகிரி தங்க வயல் திட்டத்திற்காக அரசு 1,500 ஏக்கர் நிலத்தை ஒதுக்கியுள்ளது. முதல் கட்டமாக 600 ஏக்கரில் சுரங்கப் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன.

தேவையான சுத்திகரிப்பு ஆலைகள் ஏற்கனவே அமைக்கப்பட்டுள்ளன. இரண்டாம் கட்டமாக மீதமுள்ள பகுதிகளுக்கு இத்திட்டம் விரிவுபடுத்தப்படும்.

செயல்பாட்டின் முதல் ஆண்டில் 400 கிலோ தங்கம் உற்பத்தி செய்ய இந்த ஆலை திட்டமிட்டுள்ளது. அடுத்த ஆண்டு முதல் 900 கிலோவாக உயர்த்தப்பட்டு, படிப்படியாக சுத்திகரிப்பு திறன் விரிவாக்கப்பட்டு ஆண்டுக்கு 2 டன் தங்கம் உற்பத்தி செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இத்திட்டத்தின் மூலம் சுமார் 700 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

உற்பத்தி செய்யப்படும் தங்கத்தின் மதிப்பில் 4 சதவீதத்தை ராயல்டியாக மாநில அரசு பெறும். தற்போதைய மதிப்பீடுகளின்படி, 400 கிலோ உற்பத்தியில் இருந்து சுமார் ரூ.57 கோடியும், 900 கிலோ உற்பத்தியில் இருந்து சுமார் ரூ.144 கோடியும் ராயல்டியாக அரசுக்கு கிடைக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது.

Hindusthan Samachar / vidya.b