Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 26 ஜூன் (ஹி.ச.)
சென்னை கண்ணகி நகர் பகுதியில் 17 வயது கபடி வீராங்கனைக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாகக் கூறப்படும் புகாரின் பேரில், கபடி பயிற்சியாளர் ராஜி மீது போக்சோ சட்டத்தின் கீழ் காவல்துறை வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகிறது.
போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது, கண்ணகி நகர் பகுதியைச் சேர்ந்த சிறுமி, அதே பகுதியைச் சேர்ந்த ராஜி என்பவரிடம் கபடி பயிற்சி பெற்று வந்துள்ளார். கடந்த ஜனவரி மாதம் முதல் மே மாதம் வரை மூன்று முறை சிறுமிக்கு பயிற்சியாளர் பாலியல் தொல்லை கொடுத்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இதுகுறித்து சிறுமியின் பாட்டி, செம்மஞ்சேரி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்தப் புகாரின் அடிப்படையில், போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை தொடங்கப்பட்டது.
வழக்குப்பதிவு செய்யப்பட்டதைத் தொடர்ந்து பயிற்சியாளர் ராஜி தலைமறைவாகியுள்ளதாக கூறப்படுகிறது. அவரை கைது செய்ய காவல்துறை இரண்டு தனிப்படைகளை அமைத்து தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளது.
மேலும், ராஜியின் பயிற்சியில் இருந்த மற்ற வீராங்கனைகளிடமும் விசாரணை நடத்த போலீசார் திட்டமிட்டுள்ளனர். 17 வயது சிறுமியைத் தவிர வேறு யாரேனும் இதுபோன்ற பாலியல் தொல்லைக்கு ஆளானார்களா என்பது குறித்தும் விசாரணை மேற்கொள்ளப்படுகிறது.
தேசிய அளவில் போட்டிகளில் பங்கேற்ற வீராங்கனைகள் உள்ளிட்ட பலரிடமும் தகவல் சேகரிக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது.
குற்றச்சாட்டின் தன்மை மற்றும் பின்னணி குறித்து விரிவான விசாரணை நடைபெற்று வருவதாகவும், தலைமறைவாக உள்ள பயிற்சியாளர் விரைவில் கைது செய்யப்படுவார் என்றும் காவல்துறை தெரிவித்துள்ளது.
Hindusthan Samachar / P YUVARAJ