Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 26 ஜூன் (ஹி.ச)
திமுக கூட்டணியில் இருந்தபோது கொச்சைப்படுத்தினர் தற்போது தமிழக வெற்றிக்கழக கூட்டணியில் இருக்கும் போதும் மிக இழிவாக பேசுகின்றனர்
என்று விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
முகநூல் நேரலை உரையில் பேசிய அவர்,
விடுதலை சிறுத்தைகள் கட்சி முதன்முறையாக ஆட்சி அதிகாரத்தில் பங்கேற்றிருப்பதாகவும், அமைச்சரவையில் இடம்பெற்றதன் மூலம் ஒரு அரசியல் கட்சியாக அங்கீகாரம் பெற்றிருப்பதாகவும் கூறினார். இது தனிநபரான வன்னியரசுவுக்கான அங்கீகாரம் அல்ல,ஒரு தலித் இயக்கக் கட்சி ஆட்சியில் பங்கேற்பது தனித்துவமான அரசியல் நிகழ்வாகும் என்றார்.
கட்சித் தலைவராக பொறுப்பேற்ற ஆரம்ப காலத்தில், கண்ணைக் கட்டி காட்டில் விட்டதுபோல் அரசியல் சூழல் இருந்ததாக நினைவுகூர்ந்த திருமாவளவன், கடந்த 30 ஆண்டுகளாக வஞ்சகம், சூழ்ச்சி நிறைந்த அரசியல் களத்தில் பல்வேறு அவமானங்கள், அவதூறுகள் மற்றும் சவால்களை எதிர்கொண்டு கட்சி வளர்ந்துள்ளதாக தெரிவித்தார். எதிர்நீச்சல் அடித்தே தற்போதைய நிலையை எட்டியுள்ளதாகவும் கூறினார்.
அமைச்சரவையில் இடம்பெற்றுள்ள தற்போதைய சூழலிலும் விசிக புறக்கணிக்கப்படுவதாகவும், கடுமையான விமர்சனங்களுக்கு உள்ளாகுவதாகவும் அவர் வேதனை தெரிவித்தார்.
திமுக கூட்டணியில் இருந்த காலத்திலும் கட்சி விமர்சனங்களுக்கு இலக்கானது.
தற்போது தமிழக வெற்றிக்கழக கூட்டணியில் இருந்தாலும் அதே நிலை தொடர்கிறது என்று குறிப்பிட்டார்.
நாம் தொடர்ந்து குறிவைக்கப்படுகிறோம் என்பதற்கே இது சான்று. நம்மை பலவீனப்படுத்த வேண்டும் என்ற நோக்கத்துடன் அரசியல் எதிரிகள் செயல்படுகின்றனர்.
எனவே, இந்தச் சூழல்களை கருத்தில் கொண்டு அரசியல் நகர்வுகளை மேற்கொள்ள வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.
மேலும், தமிழக அரசியல் சூழல் தலைகீழாக மாறியுள்ள நிலையில், விடுதலை சிறுத்தைகள் கட்சி மீண்டும் தவிர்க்க முடியாத அரசியல் சக்தியாக உருவெடுத்துள்ளதாகவும், அரசியல் முடிவுகளை தீர்மானிக்கும் வல்லமை கொண்ட சக்தியாக செயல்பட்டு வருவதாகவும் தொல். திருமாவளவன் தெரிவித்தார்.
Hindusthan Samachar / P YUVARAJ