Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 26 ஜூன் (ஹி.ச.)
கவிப்பேரரசு வைரமுத்து, திராவிட முன்னேற்றக் கழகத் தலைவர் மற்றும் முன்னாள் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை இன்று நேரில் சந்தித்து, டெல்லியில் நடைபெறவுள்ள 60-ஆவது ஞானபீட விருது வழங்கும் விழாவிற்கான அழைப்பிதழை வழங்கினார்.
இந்தச் சந்திப்பின்போது,
வரும் ஜூலை 13-ஆம் தேதி தனது பிறந்தநாளன்று தலைநகர் டெல்லியில் நடைபெறவுள்ள 60-ஆவது ஞானபீட விருது வழங்கும் விழாவில் தனக்கு நாட்டின் உயரிய இலக்கிய அங்கீகாரங்களில் ஒன்றான ஞானபீட விருது வழங்கப்பட உள்ளதாக வைரமுத்து தெரிவித்தார்.
மேலும், அந்த விழாவில் பங்கேற்குமாறு கேட்டுக்கொண்டு, அதற்கான அதிகாரப்பூர்வ அழைப்பிதழையும் மு.க.ஸ்டாலினிடம் வழங்கினார்.
தமிழ் இலக்கியம், கவிதை மற்றும் திரைப்படப் பாடல்களின் மூலம் பல தசாப்தங்களாக தமிழ்மொழிக்குப் பெருமை சேர்த்து வரும் வைரமுத்துவுக்கு ஞானபீட விருது வழங்கப்படுவது தமிழுக்கும் தமிழ் இலக்கிய உலகிற்கும் கிடைத்துள்ள முக்கியமான அங்கீகாரமாகக் கருதப்படுகிறது.
அழைப்பிதழைப் பெற்றுக்கொண்ட மு.க.ஸ்டாலின், ஞானபீட விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளதற்காக வைரமுத்துவுக்கு தனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்தார்.
அவரது இலக்கியப் பயணம் மேலும் சிறக்கவும், தமிழ்மொழிக்கு தொடர்ந்து பெருமை சேர்க்கவும் வாழ்த்தினார்.
இந்த சந்திப்பு இலக்கிய மற்றும் அரசியல் வட்டாரங்களில் கவனம் பெற்றுள்ளது. ஞானபீட விருது பெற உள்ள வைரமுத்துவுக்கு பல்வேறு அரசியல் தலைவர்கள், இலக்கியவாதிகள் மற்றும் தமிழ் ஆர்வலர்கள் தொடர்ந்து வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.
Hindusthan Samachar / P YUVARAJ