உதவிப் பேராசிரியர் நியமனத்தில் குளறுபடி- தேர்வு முடிவுகளை மறுபரிசீலனை செய்ய நயினார் நாகேந்திரன் வலியுறுத்தல்
சென்னை, 27 ஜூன் (ஹி.ச.) தமிழக அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் உதவிப் பேராசிரியர்கள் நியமனத்திற்காக நடத்தப்பட்ட தகுதித் தேர்வில் மதிப்பெண்கள் வழங்கியதில் குளறுபடிகள் ஏற்பட்டுள்ளதாக வெளியான தகவல்கள் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளன. இந்த வி
நயினார்


சென்னை, 27 ஜூன் (ஹி.ச.)

தமிழக அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் உதவிப் பேராசிரியர்கள் நியமனத்திற்காக நடத்தப்பட்ட தகுதித் தேர்வில் மதிப்பெண்கள் வழங்கியதில் குளறுபடிகள் ஏற்பட்டுள்ளதாக வெளியான தகவல்கள் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளன.

இந்த விவகாரம் தொடர்பாக பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில்,

எந்த அரசு ஆட்சிக்கு வந்தாலும் ஆசிரியர் பணியிடங்களை நிரப்பும் நடைமுறைகளில் முறைகேடுகளும், ஊழல் குற்றச்சாட்டுகளும் தொடர்ந்து எழுந்து வருவதாக தெரிவித்துள்ளார்.

முதல் தாளில் 150-க்கு 111 மதிப்பெண்கள் பெற்ற ஒருவருக்கு கட்டுரைத் தேர்வில் 50-க்கு பூஜ்ஜியம் வழங்கப்பட்டிருப்பதாகவும், பணி மூப்பில் முன்னிலையில் இருப்பவர்களுக்கு ஒற்றை இலக்க மதிப்பெண்கள் மட்டுமே வழங்கப்பட்டுள்ளதாகவும், முதற்கட்ட தேர்வு பட்டியலில் பணி அனுபவ மதிப்பெண் பூஜ்ஜியமாக இருந்த ஒருவருக்கு சான்றிதழ் சரிபார்ப்புக்குப் பிறகு அது 15 ஆக உயர்த்தப்பட்டுள்ளதாகவும் வெளியாகியுள்ள தகவல்கள் தீவிர விசாரணைக்கு உரியவை என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

அதிகாரிகளின் செயல்பாடுகளால் பட்டதாரிகளின் எதிர்காலம் பாதிக்கப்படக் கூடாது என்றும், ஆசிரியர் தகுதித் தேர்வு முடிவுகளை தமிழக அரசு முழுமையாக மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

மேலும், ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ள 2,708 உதவிப் பேராசிரியர் பணியிடங்களுடன் காலியாக உள்ள மேலும் 1,292 பணியிடங்களையும் சேர்த்து மொத்தம் 4,000 பணியிடங்களாக உயர்த்தி அறிவிக்க வேண்டும் என்று முதலமைச்சர் விஜயை பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் கேட்டுக் கொண்டுள்ளார்.

Hindusthan Samachar / VINOTH KUMAR P