Enter your Email Address to subscribe to our newsletters

உத்தரப்பிரதேசம், 29 ஜூன் (ஹி.ச.)
அயோத்தி ராமர் கோயிலுக்கான நன்கொடைகள் முறைகேடாக கையாடல் செய்யப்பட்டதாக பதிவு செய்யப்பட்டுள்ள வழக்கில் கைது செய்யப்பட்ட 8 பேருக்கும் சட்ட உதவி வழங்க மாட்டோம் என்று உத்தரப்பிரதேசத்தின் ஃபைசாபாத் மாவட்ட வழக்கறிஞர்கள் சங்கம் (Faizabad Bar Association) முக்கிய தீர்மானம் நிறைவேற்றியுள்ளது. மேலும், சங்கத்தின் முடிவை மீறி குற்றஞ்சாட்டப்பட்டவர்களுக்காக ஆஜராகும் உறுப்பினர் வழக்கறிஞர்களுக்கு ரூ.5 லட்சம் அபராதம் விதிக்கப்படும் என்றும் எச்சரித்துள்ளது.
திங்கள்கிழமை நடைபெற்ற பொதுக்குழுக் கூட்டத்தில் இந்த முடிவு ஒருமனதாக எடுக்கப்பட்டதாக சங்கத் தலைவர் கலிகா பிரசாத் மிஸ்ரா தெரிவித்தார்.
ராமர் கோயில் பக்தர்கள் வழங்கிய நன்கொடைகள் கையாடல் செய்யப்பட்டதாகக் கூறப்படும் சம்பவம் தங்களது மத உணர்வுகளை கடுமையாகப் புண்படுத்தியுள்ளதாகவும், அதனால் குற்றஞ்சாட்டப்பட்டவர்களுக்கு சட்டரீதியான ஆதரவு வழங்க வேண்டாம் என உறுப்பினர்கள் ஒருமனதாக முடிவு செய்துள்ளதாகவும் அவர் கூறினார்.
அத்துடன், வழக்கில் சர்ச்சைக்குரிய வகையில் பெயர் இணைக்கப்பட்டுள்ள சம்பத் ராய், அனில் மிஸ்ரா மற்றும் கோபால் ராவ் ஆகியோர் மூன்று நாட்களுக்குள் அயோத்தியை விட்டு வெளியேற வேண்டும் என்றும், இல்லையெனில் நகரை முற்றுகையிடும் போராட்டம் நடத்தப்படும் என்றும் சங்கம் எச்சரித்துள்ளது.
மேலும், இந்த வழக்கை மத்திய புலனாய்வு அமைப்பு விசாரிக்க வேண்டும் என்று கோரி மனு தாக்கல் செய்யவும் சங்கம் முடிவு செய்துள்ளது. உயர்நீதிமன்றம் சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடாவிட்டால், வழக்கறிஞர்கள் சங்கமே தனியாக நீதிமன்றத்தை அணுகும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையில், ராமர் கோயில் நன்கொடை மோசடி வழக்கில் கைது செய்யப்பட்ட 8 பேரின் வீடுகளில் போலீசார் சோதனை நடத்தி, சொத்து விவரங்கள் மற்றும் பணப்பரிவர்த்தனைகள் தொடர்பாக விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர். வங்கி அதிகாரிகளின் பங்கு குறித்தும் விசாரணை விரிவுபடுத்தப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
Hindusthan Samachar / VINOTH KUMAR P