பணி நிரந்தரம் கோரி சென்னையில் மின்வாரிய ஒப்பந்த ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
சென்னை, 29 ஜூன் (ஹி.ச.) சென்னை எழும்பூரில் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தில் (TANGEDCO) பணியாற்றும் ஒப்பந்த ஊழியர்கள் ஆயிரக்கணக்கில் திரண்டு இன்று பிரம்மாண்ட ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். நீண்டகாலமாக நிலுவையில் உள்ள பணி நிரந்
Electricity Board contract workers stage protest


சென்னை, 29 ஜூன் (ஹி.ச.)

சென்னை எழும்பூரில் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தில் (TANGEDCO) பணியாற்றும் ஒப்பந்த ஊழியர்கள் ஆயிரக்கணக்கில் திரண்டு இன்று பிரம்மாண்ட ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

நீண்டகாலமாக நிலுவையில் உள்ள பணி நிரந்தரம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த போராட்டம் நடைபெற்றது.

எழும்பூர் பகுதியில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் மாநிலம் முழுவதிலுமிருந்து வந்த ஒப்பந்த ஊழியர்கள் பெருமளவில் கலந்துகொண்டனர்.

பத்து ஆண்டுகளுக்கும் மேலாக ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றி வரும் தங்களை உடனடியாக பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்பதே அவர்களின் முதன்மை கோரிக்கையாக இருந்தது.

மேலும், சம வேலைக்கு சம ஊதியம் வழங்க வேண்டும், ஆபத்தான பணிச்சூழலில் பணிபுரியும் தங்களுக்கு உரிய பாதுகாப்பு உபகரணங்கள் மற்றும் காப்பீட்டு வசதிகள் அளிக்க வேண்டும், பணியின்போது உயிரிழக்கும் ஊழியர்களின் குடும்பத்திற்கு உரிய இழப்பீடு மற்றும் குடும்பத்தில் ஒருவருக்கு வேலைவாய்ப்பு வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளையும் வலியுறுத்தி ஊழியர்கள் முழக்கமிட்டனர்.

மின் விநியோகம், மின் கட்டண வசூல், பழுது நீக்கும் பணிகள் என மின்வாரியத்தின் அனைத்து அடிப்படை பணிகளிலும் ஒப்பந்த ஊழியர்களே முன்களத்தில் இருப்பதாகவும், ஆனால் தங்களுக்கு உரிய அங்கீகாரமும் சலுகைகளும் மறுக்கப்படுவதாகவும் போராட்டக்காரர்கள் வேதனை தெரிவித்தனர்.

கோரிக்கைகள் நிறைவேறும் வரை தங்களது போராட்டம் தொடரும் எனவும், அரசு உடனடியாக பேச்சுவார்த்தை நடத்தி தீர்வு காண வேண்டும் எனவும் அவர்கள் வலியுறுத்தினர்.

இந்த ஆர்ப்பாட்டத்தால் எழும்பூர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Hindusthan Samachar / vidya.b