வடகிழக்கு மாநிலங்களை புரட்டிப்போடும் கனமழை
புதுடெல்லி, 29 ஜூன் (ஹி.ச.) தென்மேற்கு பருவமழை வடகிழக்கு மாநிலங்களில் மிகத் தீவிரமடைந்துள்ளதால், அங்கு கனமழை வெளுத்து வாங்கி வருகிறது. தொடர் கனமழையின் காரணமாக அருணாச்சல பிரதேசத்தின் பல்வேறு மாவட்டங்களில் ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு தாழ்வ
வடகிழக்கு மாநிலங்களை புரட்டிப்போடும் கனமழை


புதுடெல்லி, 29 ஜூன் (ஹி.ச.)

தென்மேற்கு பருவமழை வடகிழக்கு மாநிலங்களில் மிகத் தீவிரமடைந்துள்ளதால், அங்கு கனமழை வெளுத்து வாங்கி வருகிறது.

தொடர் கனமழையின் காரணமாக அருணாச்சல பிரதேசத்தின் பல்வேறு மாவட்டங்களில் ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு தாழ்வான பகுதிகளை நீர் சூழ்ந்துள்ளது.

மலைப்பகுதிகளில் அடுத்தடுத்து நிலச்சரிவுகள் ஏற்பட்டு வருவதால், முக்கிய சாலைகளில் போக்குவரத்து முற்றிலும் துண்டிக்கப்பட்டுள்ளது.

இதனால் கிராமங்களுக்கு இடையேயான தொடர்பு துண்டிக்கப்பட்டு, அத்தியாவசியப் பொருட்களின் விநியோகம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

வடகிழக்கு மாநிலங்கள் மட்டுமின்றி, மகாராஷ்டிரா, உத்தரப்பிரதேசம் மற்றும் மும்பை மாநகரிலும் இடைவிடாது பெய்து வரும் கனமழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் முடங்கியுள்ளது.

மும்பையில் தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கியதால் ரயில் மற்றும் சாலைப் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. அலுவலகங்கள், பள்ளிகளுக்கு செல்வோர் கடும் சிரமத்திற்கு உள்ளாகினர்.

இந்நிலையில், இந்திய வானிலை ஆய்வு மையம் அசாம், மேகாலயா மற்றும் அருணாச்சலப் பிரதேசம் ஆகிய மாநிலங்களுக்கு அடுத்த 48 மணி நேரத்திற்கு மிக கனமழை பெய்யக்கூடும் என ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுத்துள்ளது.

முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மீட்புப் படையினர் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர்.

தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறும், தேவையின்றி வெளியே செல்வதைத் தவிர்க்குமாறும் மாவட்ட நிர்வாகங்கள் அறிவுறுத்தியுள்ளன.

Hindusthan Samachar / vidya.b