Enter your Email Address to subscribe to our newsletters

தூத்துக்குடி, 29 ஜூன் (ஹி.ச.)
கடந்த சில தினங்களுக்கு முன்பு மனிதவள மேலாண்மைத் துறை அமைச்சர் சரத்குமார், பொது இடத்தில் போதைப்பொருள் பயன்படுத்துவது போன்ற வீடியோ ஒன்று வெளியாகிப் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
இந்த பழைய வீடியோ தொடர்பாக அவர் ஒரு விளக்க வீடியோவையும் வெளியிட்டிருந்தார்.
ஆனால், அவரது அந்த விளக்கமும் பொதுவெளியில் கடும் விமர்சனத்திற்கு உள்ளானது.
இதைத் தொடர்ந்து, அமைச்சரைப் பதவி நீக்கம் செய்ய வலியுறுத்தி திமுக மாணவர் அணியினர் இன்று ஆர்ப்பாட்டம் நடத்தப்போவதாக அறிவித்தனர்.
இந்த ஆர்ப்பாட்டத்திற்குக் காவல்துறை தரப்பில் அனுமதி மறுக்கப்பட்டது.
இந்நிலையில், தடையை மீறித் தூத்துக்குடி மாவட்டம் டூவி புரத்தில் வடக்கு மாவட்ட மாணவர் அணி அமைப்பாளர் சீனிவாசன் மற்றும் தெற்கு மாவட்ட மாணவர் அணி அமைப்பாளர் அருண்குமார் ஆகியோர் தலைமையில் திமுகவினர் திரண்டு இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட முயன்றனர்.
ஆர்ப்பாட்டத்தில் மாநகரச் செயலாளர் எஸ்.ஆர்.ஆனந்த சேகரன், மாவட்ட மாணவர் அணி துணை அமைப்பாளர்கள் கனகராஜ், கோகுல், ஆகாஷ், பிரதீபா, மாநகர மாணவர் அணி அமைப்பாளர் வினோத், துணை அமைப்பாளர் பாலமுருகன் உள்பட 200-க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.
இதனையடுத்து, தூத்துக்குடி டவுன் காவல் கண்காணிப்பாளர் சுனில், காவல் ஆய்வாளர்கள் பாஸ்கரன், வேல்ராஜ், ஜோபா ஜென்சி ஆகியோர் தலைமையிலான காவல்துறையினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட முயன்ற அனைவரையும் அதிரடியாகக் கைது செய்தனர்.
கைது செய்யப்பட்ட அனைவரும் டூவி புரம் பகுதியில் உள்ள ஒரு தனியார் திருமண மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
இச்சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.
Hindusthan Samachar / vidya.b