பல கோடி ரூபாய் மதிப்பிலான கருப்பு கிரானைட் கற்கள் கடத்தல் - நடவடிக்கை எடுக்க கோரி புகார்
விழுப்புரம், 29 ஜூன் (ஹி.ச.) விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி வருவாய் வட்டத்திற்குட்பட்ட கண்டாச்சிபுரம் அருகே உள்ள நல்லாப்பாளையம் கிராமத்தில் கடந்த 1994ஆம் ஆண்டு முதல் தமிழ்நாடு அரசு கனிமவள நிறுவனம் சார்பில் கல் குவாரி செயல்பட்டு வந்தது. இந்த
கண்டாச்சிபுரம் காவல் நிலையம்


விழுப்புரம், 29 ஜூன் (ஹி.ச.)

விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி வருவாய் வட்டத்திற்குட்பட்ட கண்டாச்சிபுரம் அருகே உள்ள நல்லாப்பாளையம் கிராமத்தில் கடந்த 1994ஆம் ஆண்டு முதல் தமிழ்நாடு அரசு கனிமவள நிறுவனம் சார்பில் கல் குவாரி செயல்பட்டு வந்தது.

இந்த கல் குவாரியில் இருந்து உயர்தரம் வாய்ந்த ஜெட் பிளாக் கிரானைட் கற்களை வெட்டி எடுத்து விற்பனை செய்யப்பட்டு வந்த நிலையில் கடந்த சில ஆண்டுகளாக இந்த கல் குவாரியை செயல்படாமல் தமிழக அரசு தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளதாக கூறப்படுகிறது.

கல் குவாரி நடைபெற்ற சமயத்தில் வெட்டி எடுக்கப்பட்ட பல கோடி ரூபாய் மதிப்பிலான 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட உயர்தரம் வாய்ந்த கருப்பு கிரானைட் கற்கள் அந்த பகுதியிலேயே இருந்து வருகிறது.

இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு மர்ம நபர்கள் சிலர் நள்ளிரவு நேரத்தில் லாரி மற்றும் கிரேன் இயந்திரங்களை கொண்டு வந்து 100க்கும் மேற்பட்ட கருப்பு கிரானைட் கற்களை கொள்ளையடித்து சென்றுள்ளதாக அப்பகுதி பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

அரசு பாதுகாப்பில் இருந்து வந்த பல கோடி மதிப்பிலான 100க்கும் மேற்பட்ட கருப்பு கிரானைட் கற்களை நள்ளிரவு நேரத்தில் லாரிகளில் ஏற்றி கொள்ளையடித்து சென்ற மர்ம கும்பல் குறித்து விசாரித்து உரிய நடவடிக்கை எடுப்பதோடு, கொள்ளையடித்து கடத்தி செல்லப்பட்ட பல கோடி மதிப்புள்ள கருப்பு கிரானைட் கற்களை மீட்க வேண்டும் என நல்லாப்பாளையம் கிராம பொதுமக்கள், கண்டாச்சிபுரம் காவல் நிலையம், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், கனிமவளத்துறை அதிகாரிகள், முதலமைச்சரின் தனிப்பிரிவு உள்ளிட்டோருக்கு புகார் மனுக்களை அனுப்பியுள்ளனர்.

தற்காலிகமாக மூடப்பட்ட கல் குவாரியில் இருந்து பல கோடி மதிப்புள்ள உயர்தர கருப்பு கிரானைட் கற்களை மர்ம கும்பல் ஒன்று நள்ளிரவு நேரத்தில் கடத்தி சென்றுள்ள சம்பவம் அப்பகுதி பொதுமக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கடத்தலில் ஈடுபட்ட கும்பலை கைது செய்து பல கோடி மதிப்புள்ள கருப்பு கிரானைட் கற்களை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என நல்லாப்பாளையம் கிராம பொதுமக்கள் தமிழக அரசிற்கு வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

Hindusthan Samachar / ANANDHAN