Enter your Email Address to subscribe to our newsletters

திருவனந்தபுரம், 03 ஜூன் (ஹி.ச.)
கேரள சட்டப்பேரவையில் எதிர்க்கட்சி உறுப்பினர் வி. ஜாய், விதி 50இன் கீழ் இன்று (ஜூன் 03) ஒத்திவைப்பு தீர்மானம் கொண்டு வந்தார்.
அரசு ஊழியர்களின் இடமாற்றங்கள் ஊழியர்கள் மத்தியில் குழப்பமும் அச்சமும் நிலவுவதாகவும் அவர் குற்றம்சாட்டினார். வழக்கமான அலுவல்களை ஒத்திவைத்து இதுகுறித்து விவாதிக்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.
இந்த குற்றச்சாட்டுகளுக்கு பதிலளித்து பேசிய கேரள அமைச்சர் சன்னி ஜோசப் கூறுகையில்,
இடமாற்றங்கள் அனைத்தும் அரசு உத்தரவுகளின் அடிப்படையிலேயே நடைபெறுகிறது.
2017ஆம் ஆண்டு பிப்ரவரி 25ஆம் தேதியிட்ட அரசாணையின் 3ஆவது பிரிவு மற்றும் அதில் குறிப்பிடப்பட்டுள்ள வழிகாட்டுதல்களுக்கு உட்பட்டே பொது இடமாற்றங்கள் மேற்கொள்ளப்படுகின்றன.
புதிய அரசு பொறுப்பேற்ற பிறகு, நிர்வாக ரீதியான தேவைகள் மற்றும் ஓய்வு பெறுதல் காரணமாக மட்டுமே வழக்கமான இடமாற்றங்கள் நடைபெற்றுள்ளன. வேறு எந்த உள்நோக்கத்துடனும் இடமாற்றங்கள் செய்யப்படவில்லை.
அரசின் இந்த நடவடிக்கைகள் ஊழியர்களின் மன உறுதியை குலைப்பதாகவோ அல்லது பொதுமக்களுக்கு சிரமத்தை ஏற்படுத்துவதாகவோ இல்லை. அரசு சேவைகளின் செயல்திறனை மேம்படுத்துவதும், நிர்வாகத்தை மேலும் சீராக்குவதும் மட்டுமே இந்த இடமாற்றங்களின் ஒரே நோக்கம். பொதுநலனை முன்னிறுத்தியே அனைத்து முடிவுகளும் எடுக்கப்படுகின்றன.
அதே நேரத்தில், இடமாற்றங்கள் தொடர்பாக ஊழியர்களுக்கு ஏதேனும் குறைகள் இருந்தால், அவற்றை அரசு கனிவுடன் பரிசீலிக்க தயாராக உள்ளது.
நியாயமான குறைகள் மீது உரிய நடவடிக்கை எடுத்து தீர்வு காணப்படும். ஊழியர்களின் நலனை பாதுகாப்பதில் அரசு உறுதியாக உள்ளது.
இந்த விவகாரத்தில் எதிர்க்கட்சி எழுப்பிய குற்றச்சாட்டுகளுக்கு முழுமையான விளக்கம் அளிக்கப்பட்டுவிட்டதால், சட்டப்பேரவை நடவடிக்கைகளை ஒத்திவைத்து தனியாக விவாதம் நடத்த வேண்டிய அவசியம் இல்லை
என்று கூறி அமைச்சர் சன்னி ஜோசப் தனது உரையை நிறைவு செய்தார்.
இடமாற்ற நடைமுறைகள் வெளிப்படையாகவும் விதிகளுக்கு உட்பட்டும் நடப்பதாக அரசு தரப்பில் மீண்டும் வலியுறுத்தப்பட்டுள்ளது.
Hindusthan Samachar / vidya.b