Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 04 ஜூன் (ஹி.ச.)
தமிழகத்தில் சாலை விபத்துகளை குறைக்கும் நோக்கில், அரசு பேருந்து ஓட்டுநர்கள் வாகனம் இயக்கும் போது செல்போன் பயன்படுத்துவதற்கு தமிழக அரசு ஏற்கனவே தடை விதித்துள்ளது.
இந்நிலையில், திருவள்ளூரில் இருந்து பூந்தமல்லி நோக்கி இயக்கப்பட்ட V597A வழித்தட அரசு பேருந்தின் ஓட்டுநர் ஒருவர், பேருந்தை இயக்கிக்கொண்டே செல்போன் பயன்படுத்துவதாகக் கூறப்படும் காணொளி சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளது.
பயணிகளின் உயிர் பாதுகாப்பை நேரடியாக பாதிக்கக்கூடிய இந்தச் சம்பவம் பொதுமக்களிடையே அதிருப்தியையும் அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது. சாலை பாதுகாப்பு விதிமுறைகளை மீறி ஓட்டுநர் செல்போன் பயன்படுத்தியிருப்பது உறுதி செய்யப்பட்டால், அது மிகக் கடுமையான அலட்சியமாகக் கருதப்பட வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது.
மேலும், இந்த காணொளி சம்பந்தப்பட்ட போக்குவரத்துத் துறை அதிகாரிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும், சம்பந்தப்பட்ட ஓட்டுநர் மீது துறை ரீதியான விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது.
எதிர்காலத்தில் இதுபோன்ற சம்பவங்கள் மீண்டும் நடைபெறாத வகையில், வாகனம் இயக்கும் போது செல்போன் பயன்படுத்தும் ஓட்டுநர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க தமிழக அரசு மற்றும் போக்குவரத்துத் துறை முன்வர வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Hindusthan Samachar / P YUVARAJ