சென்னையில் கார் மோதி ஐடி ஊழியர் பலி - ரேபிடோ ஓட்டுநர் படுகாயம்
சென்னை, 04 ஜூன் (ஹி.ச.) சென்னை அம்பத்தூரில் இருந்து போரூர் டி.எல்.எஃப். நோக்கி இன்று அதிகாலை ரேபிடோ பைக்கில் சென்று கொண்டிருந்த 31 வயது கோமதி என்ற இளம்பெண், வானகரம் மேம்பாலம் அருகே சென்றபோது பின்னால் அதிவேகமாக வந்த அடையாளம் தெரியாத கார் ஒன்று
சென்னையில் கார் மோதி ஐடி ஊழியர் பலி - ரேபிடோ ஓட்டுநர் படுகாயம்


சென்னை, 04 ஜூன் (ஹி.ச.)

சென்னை அம்பத்தூரில் இருந்து போரூர் டி.எல்.எஃப். நோக்கி இன்று அதிகாலை ரேபிடோ பைக்கில் சென்று கொண்டிருந்த 31 வயது கோமதி என்ற இளம்பெண், வானகரம் மேம்பாலம் அருகே சென்றபோது பின்னால் அதிவேகமாக வந்த அடையாளம் தெரியாத கார் ஒன்று பைக் மீது பயங்கரமாக மோதியது.

மோதிய வேகத்தில் ரேபிடோ பைக்கில் இருந்து தூக்கி வீசப்பட்ட கோமதி, தலையில் பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

ரேபிடோ ஓட்டுநர் படுகாயங்களுடன் சாலையில் விழுந்து கிடந்த நிலையில், அவ்வழியே சென்றவர்கள் அவரை மீட்டு அருகிலுள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். அவர் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

விபத்தை ஏற்படுத்திய கார், விபத்து நடந்த இடத்தில் நிற்காமல் வேகமாக தப்பிச் சென்றதாக நேரில் பார்த்தவர்கள் தெரிவித்துள்ளனர்.

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த மதுரவாயல் போக்குவரத்து புலனாய்வுப் பிரிவு போலீசார், கோமதியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த விபத்து குறித்து வழக்குப் பதிவு செய்துள்ள போலீசார், அப்பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து தப்பிச் சென்ற காரை தீவிரமாக தேடி வருகின்றனர்.

பணிக்குச் செல்லும் வழியில் இளம்பெண் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

Hindusthan Samachar / vidya.b