Enter your Email Address to subscribe to our newsletters

புதுடெல்லி, 04 ஜூன் (ஹி.ச.)
மேற்காசியாவில் பதற்றம் மேலும் அதிகரிக்கும் வகையில், குவைத்தில் அமைந்துள்ள சர்வதேச விமான நிலையத்தின் மீது ஈரான் தாக்குதல் நடத்தியுள்ளது.
இந்த தாக்குதலில் இந்தியர்கள் உயிரிழந்ததுடன், பலர் படுகாயமடைந்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த தாக்குதலுக்கு இந்திய வெளியுறவு அமைச்சகம் கடுமையான கண்டனத்தை பதிவு செய்துள்ளது.
அமெரிக்காவுக்கும் ஈரானுக்கும் இடையே அமைதி பேச்சுவார்த்தை நடைபெற்று வரும் சூழலிலேயே இந்த தாக்குதல் நிகழ்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
பேச்சுவார்த்தைகள் ஒருபுறம் நடந்தாலும், இருதரப்பும் தொடர்ந்து தாக்குதல்களில் ஈடுபட்டு வருவது பிராந்திய ஸ்திரத்தன்மையை கேள்விக்குறியாக்கியுள்ளது.
குவைத் சர்வதேச விமான நிலையத்தை இலக்காக கொண்டு ஈரான் மேற்கொண்ட தாக்குதலில், அங்கு பணியில் இருந்த மற்றும் பயணிகளாக இருந்த இந்தியர்கள் பலர் உயிரிழந்துள்ளனர்.
மேலும் பல இந்தியர்கள் படுகாயங்களுடன் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். காயமடைந்தவர்களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் வழங்க குவைத்தில் உள்ள இந்திய தூதரகம் தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது.
இந்த சம்பவம் குறித்து கருத்து தெரிவித்துள்ள இந்திய வெளியுறவு அமைச்சகம், மேற்காசியாவில் நிலவும் மோதல்களில் அப்பாவி மக்களையும், பொது உள்கட்டமைப்புகளையும் இலக்காக கொள்வதை ஒருபோதும் ஏற்க முடியாது என திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.
இத்தகைய தாக்குதல்கள் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும் எனவும், அனைத்து தரப்பினரும் கட்டுப்பாட்டுடன் நடந்துகொண்டு பதற்றத்தை தணிக்க முன்வர வேண்டும் எனவும் இந்தியா வலியுறுத்தியுள்ளது.
பிராந்தியத்தில் அமைதியையும் ஸ்திரத்தன்மையையும் நிலைநாட்டுவதற்கு பேச்சுவார்த்தையே ஒரே வழி என்பதை இந்தியா தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது.
பொதுமக்களின் உயிரிழப்புகளை ஏற்படுத்தும் எந்தவொரு நடவடிக்கையும் சர்வதேச சட்டங்களுக்கு எதிரானது எனவும் வெளியுறவுத்துறை சுட்டிக்காட்டியுள்ளது.
Hindusthan Samachar / vidya.b