குஜராத்தில் ரூ.12,421 கோடி மதிப்பிலான நெடுஞ்சாலை திட்டங்களை பிரதமர் மோடி நாளை தொடங்கி வைக்கிறார்
குஜராத், 04 ஜூன் (ஹி.ச) உலக சுற்றுச்சூழல் தினமான நாளை (ஜூன் 5, வெள்ளிக்கிழமை), பிரதமர் நரேந்திர மோடி குஜராத்தின் சூரத் நகருக்கு வருகை தருகிறார். அங்கு, தெற்கு குஜராத் பகுதியில் ரூ.12,421 கோடி மதிப்பிலான தேசிய நெடுஞ்சாலை திட்டங்களை தொடங்கி வ
Modi will inaugurate highway projects


குஜராத், 04 ஜூன் (ஹி.ச)

உலக சுற்றுச்சூழல் தினமான நாளை (ஜூன் 5, வெள்ளிக்கிழமை), பிரதமர் நரேந்திர மோடி குஜராத்தின் சூரத் நகருக்கு வருகை தருகிறார்.

அங்கு, தெற்கு குஜராத் பகுதியில் ரூ.12,421 கோடி மதிப்பிலான தேசிய நெடுஞ்சாலை திட்டங்களை தொடங்கி வைத்து, அடிக்கல் நாட்டுகிறார் என குஜராத் அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குஜராத் முதலமைச்சர் அலுவலகம் வெளியிட்ட தகவலின்படி, வதோதரா-மும்பை விரைவுச்சாலையின் இரண்டு தொகுப்புகளை பிரதமர் தொடங்கி வைப்பதுடன், நான்கு முக்கிய நெடுஞ்சாலை திட்டங்களுக்கும் அடிக்கல் நாட்டுகிறார். இந்த திட்டங்கள், குறிப்பாக தெற்கு குஜராத்தில் இணைப்பு வசதியை மேம்படுத்தி, பிராந்திய பொருளாதார வளர்ச்சியை ஊக்குவிக்கும் நோக்கம் கொண்டவை.

குறிப்பாக, வதோதரா-மும்பை விரைவுச்சாலையின் 36 கி.மீ நீளமுள்ள கிம்-எனா பகுதியையும் (தொகுப்பு VI), 27.50 கி.மீ நீளமுள்ள கண்டேவா-எனா பகுதியையும் (தொகுப்பு VII) பிரதமர் தொடங்கி வைக்கிறார். இவை இரண்டும் சேர்ந்து ரூ.7,689 கோடி செலவில் உருவாக்கப்பட்டுள்ளன. இந்த பகுதிகளில் பெரிய மற்றும் சிறிய பாலங்கள், ரயில்வே மேம்பாலங்கள், வாகன சுரங்கப்பாதைகள் உள்ளிட்ட கட்டமைப்புகள் அமைக்கப்பட்டுள்ளன.

உள்ளூர் இணைப்பை மேம்படுத்தவும், பயணிகளின் தடையற்ற போக்குவரத்தை உறுதி செய்யவும், மொத்தம் 70 சுரங்கப்பாதைகள் மற்றும் இரண்டு இடைமாற்று மேம்பாலங்கள் கட்டப்பட்டுள்ளன.

இந்த எட்டு வழித்தடம் செயல்பாட்டுக்கு வருவதன் மூலம், பிராந்திய இணைப்பு கணிசமாக மேம்படுவதுடன் பயண நேரமும் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், ஓட்டுநர்களின் பாதுகாப்பு மற்றும் வசதிக்காக இரு தொகுப்புகளிலும் சேர்த்து ஏழு சாலையோர வசதிகள் அமைக்கப்பட உள்ளன.

நிறைவடைந்த இந்த பகுதிகள், டெல்லி-மும்பை விரைவுச்சாலை வழியாக சரக்கு போக்குவரத்தை மேம்படுத்துவதுடன், உள்ளூர் தொழில்துறைகளின் தளவாட செலவுகளையும் குறைக்கும். இது பாரத்மாலா திட்டத்தின் நோக்கங்களுடன் ஒத்துப்போகிறது.

மேலும், இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் (NHAI) ரூ.4,732 கோடி மதிப்பிலான நான்கு திட்டங்களுக்கு பிரதமர் அடிக்கல் நாட்டுகிறார்.

இவற்றில், தமாசியா முதல் பிடாடா/மோவி வரையிலான தே.நெ-56-ன் நான்கு வழிச்சாலை (தொகுப்பு 4), நசர்போர் முதல் மலோதா வரையிலான தே.நெ-56-ன் நான்கு வழிச்சாலை (தொகுப்பு 6), ரிலையன்ஸ் பகுதியில் ஆறு வழி வாகன சுரங்கப்பாதை, மற்றும் சூரத்-ஹசிரா பிரிவில் காவாஸ் பகுதியில் வாகன சுரங்கப்பாதை-மேம்பாலம் ஆகியவை அடங்கும்.

தமாசியா-பிடாடா மற்றும் நசர்போர்-மலோதா பிரிவுகளின் நான்கு வழிச்சாலை பணிகள், ஒற்றுமை சிலைக்கான இணைப்பையும், நர்மதா, தாபி, வல்சாட், சோட்டா உதேபூர் போன்ற பழங்குடியின மாவட்டங்களுக்கான இணைப்பையும் மேம்படுத்தும். விவசாயிகள், தொழில்துறைகள் மற்றும் முக்கிய வர்த்தக வழித்தடங்களை இணைப்பதன் மூலம் உள்ளூர் வளர்ச்சிக்கு இந்த திட்டங்கள் துணைபுரியும்.

107.67 கி.மீ நீளமுள்ள இந்த நான்கு வழித்தடம், பயண நேரத்தை சுமார் 40 நிமிடங்கள் குறைப்பதுடன், சராசரி வேகத்தை கிட்டத்தட்ட 75% அதிகரிக்கும். இது மருந்து மற்றும் மருத்துவ குழுமங்கள், மீன்பிடி மற்றும் கடல் உணவு குழுமங்கள், பழங்குடியின பகுதிகள், மற்றும் ஒரு விமான நிலையம், இரண்டு ரயில் நிலையங்கள், இரண்டு துறைமுகங்கள் உள்ளிட்ட முக்கிய தளவாட மையங்களை இணைக்கும்.

கூடுதலாக, தேசிய நெடுஞ்சாலை 53-ன் ஹசிரா துறைமுகம்-சூரத் பிரிவில் சுமார் ரூ.149 கோடி மதிப்பில் இரண்டு திட்டங்கள் செயல்படுத்தப்பட உள்ளன. ஹசிரா துறைமுகம் மற்றும் அருகிலுள்ள தொழிற்பேட்டைகளுக்கு கனரக சரக்கு போக்குவரத்தை எளிதாக்கும் வகையில், ஆறு வழி மேம்பாலம் மற்றும் வாகன சுரங்கப்பாதை அமைக்கப்படுகிறது.

இந்த திட்டங்கள், கடல்சார் வர்த்தகம் மற்றும் தொழில் விரிவாக்கத்திற்கு ஆதரவளிப்பதுடன், சூரத் குடியிருப்பாளர்களுக்கு பாதுகாப்பான மற்றும் நெரிசல் குறைந்த பயணத்தை வழங்கும். ஹசிரா துறைமுகத்திற்கு அருகிலுள்ள அடர்த்தியான தொழிற்பேட்டை பகுதியில் போக்குவரத்து நெரிசலை குறைத்து, ஒட்டுமொத்த போக்குவரத்து திறனையும் மேம்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Hindusthan Samachar / vidya.b