அண்ணாமலைக்கும் எனக்கும் எவ்வித கருத்து வேறுபாடும் இல்லை - நயினார் நாகேந்திரன்
திருநெல்வேலி, 04 ஜூன் (ஹி.ச.) பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் திருநெல்வேலியில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது அவர்,செய்தியாளர்களிடம் கூறியதாவது, எனது அருமை சகோதரர் அண்ணாமலைக்கு இனிய பிறந்தநாள் நல் வாழ்த்துகளைத் த
அண்ணாமலைக்கும் எனக்கும் எவ்வித கருத்து வேறுபாடும் இல்லை - நயினார் நாகேந்திரன்


திருநெல்வேலி, 04 ஜூன் (ஹி.ச.)

பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் திருநெல்வேலியில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார்.

அப்போது அவர்,செய்தியாளர்களிடம் கூறியதாவது,

எனது அருமை சகோதரர் அண்ணாமலைக்கு இனிய பிறந்தநாள் நல் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். அவர் ஆரோக்கியத்தோடும், மகிழ்ச்சியோடும் இருக்க கடவுள் அருள வேண்டும்.

புதிய கட்சி தொடங்குவது குறித்து அண்ணாமலை இதுவரை யாரிடமும் பேசவில்லை. நாங்களும் இது குறித்து அவரிடம் பேசவில்லை. பொதுவாக எப்போதும் போல கட்சி ரீதியாக நாங்கள் அவருடன் பேசிக்கொண்டிருக்கிறோம். சிறிய விஷயத்தைக்கூட பெரிய விஷயமாகக் காட்டுவது நமது ஊடகங்கள்தான்.

நீங்கள் அது குறித்து அவரிடம்தான் கேட்க வேண்டும்.

மாநிலத் தலைவர் என்ற முறையில் இதுவரை என்னிடம் எந்த கடிதமும் வரவில்லை. ராஜினாமா தொடர்பாக இதுவரை அவர் என்னிடம் எதுவும் பேசவில்லை. கட்சி விவகாரம், குடும்ப விவகாரம் குறித்து நாங்கள் பேசிக்கொள்கிறோம்.

தேர்தலின்போதுகூட அண்ணாமலை தனி ஹெலிகாப்டரில் எல்லா தொகுதிகளுக்கும் சென்று பிரச்சாரம் செய்தார். எனவே, எங்களுக்குள் கருத்து வேறுபாடு எதுவும் இல்லை.

முதல்வராக பதவியேற்ற பிறகு நன்றி தெரிவிப்பதற்காக விஜய் திருச்சி வந்திருந்தார். முன்னதாக சட்டப்பேரவையில் பேசும்போது, பெரும்பான்மை இல்லாவிட்டாலும், எங்கள் அரசு சிறுபான்மை அரசு என அவர் கூறினார். இது சிறுபான்மை அரசா, சிறுபான்மையினர் அரசா என்பது குறித்து அவர் விளக்க வேண்டும்.

தவெக அரசாங்கம் வந்து 23 நாட்கள் ஆகின்றன. ஆனால், முந்தைய திமுக அரசாங்கத்துக்கும் இந்த அரசாங்கத்துக்கும் ஒரு வித்தியாசமும் இல்லை. பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் இப்போதும் நாள்தோறும் நடக்கின்றன. அனைத்து இடங்களிலும் கஞ்சா விற்பனையும் நடந்து கொண்டிருக்கிறது.

15க்கும் மேற்பட்ட படுகொலைகள் நடந்துள்ளன. டாஸ்மாக் கடைகளில் இப்போதும் மாமுல் வாங்கப்படுகிறது. பாட்டிலுக்கு ரூ. 10 வாங்கலாம் என்று உயர் நீதிமன்றமே கூறி இருக்கிறது என அமைச்சரே கூறி இருக்கிறார். தேர்தலுக்கு முன் கரூரில் விஜய் பேசும்போது, பாட்டிலுக்கு 10 ரூபாய் என பாடினார். இப்போதும் பாட்டிலுக்கு 10 ரூபாய் வாங்கப்படுகிறது.

சென்னை அண்ணா சாலையில் உள்ள மின்சார வாரியத்தின் தலைமை அலுவலகத்தில் இருந்து ஹார்ட் டிஸ்க் காணாமல் போய்விட்டதாகக் கூறுகிறார்கள். டெண்டர் விட்டதில் ரூ.400 கோடிக்கும் மேல் ஊழல் என்கிறார்கள். திமுக ஆட்சி போய்விட்டது. தவெக ஆட்சியில் உள்ளது. இப்போது இதுபோன்று நடக்கிறது என்றால் அதற்கு யார் பொறுப்பேற்க வேண்டும்.

நான் டெல்லி சென்று அமைப்பு பொதுச் செயலாளரைச் சந்தித்துப் பேசிவிட்டு வந்தேன். என்னிடம் மத்திய அமைச்சரவையில் இடம் பெறுவது பற்றி எதுவும் சொல்லவில்லை. ஊடகங்கள்தான் இப்படி செய்தி வெளியிடுகின்றன.

காங்கிரஸ் கட்சியின் பினாமி கட்சி போலத்தான் தவெக உள்ளது. பதவியேற்பின்போதும், அமைச்சர்களுடனான குழு புகைப்படத்தின்போதும் ராகுல் காந்தி இருந்தார். எனவே, காங்கிரசின் மறு பிம்பமாக தவெக உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

Hindusthan Samachar / vidya.b