சிறுமி பாலியல் வன்கொடுமை - ஒடிசா, உ.பி. அரசுகளிடம் தேசிய மனித உரிமைகள் ஆணையம் அறிக்கை கோரியது
ஒடிசா, 04 ஜூன் (ஹி.ச.) ஒடிசா மாநிலம் டெங்கானல் மாவட்டம் கன்கடஹாடா பகுதியைச் சேர்ந்த 17 வயது பழங்குடியின சிறுமி, சுமார் மூன்று மாதங்கள் ஒரு வீட்டில் அடைத்து வைக்கப்பட்டு, தொடர்ந்து பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது
சிறுமி பாலியல் வன்கொடுமை - ஒடிசா, உ.பி. அரசுகளிடம் தேசிய மனித உரிமைகள் ஆணையம் அறிக்கை கோரியது


ஒடிசா, 04 ஜூன் (ஹி.ச.)

ஒடிசா மாநிலம் டெங்கானல் மாவட்டம் கன்கடஹாடா பகுதியைச் சேர்ந்த 17 வயது பழங்குடியின சிறுமி, சுமார் மூன்று மாதங்கள் ஒரு வீட்டில் அடைத்து வைக்கப்பட்டு, தொடர்ந்து பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. மேலும், சிறுமி கர்ப்பமானபோது, அவரது ஒப்புதல் இன்றி கட்டாய கருக்கலைப்பு செய்யப்பட்டது.

அதன்பின், அவர் ரூ.50,000-க்கு மற்றொரு நபருக்கு விற்கப்பட்டு, தப்பிக்கும் வரை சுமார் இரண்டு ஆண்டுகள் பலரால் தொடர்ந்து பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தப்பட்டார் என 2026 மே 29 முதல் ஊடகங்களில் செய்திகள் வெளியாகின.

இச்சம்பவம் தொடர்பாக, தேசிய மனித உரிமைகள் ஆணையம் (NHRC) இன்று தானாக முன்வந்து வழக்குப் பதிவு செய்துள்ளது.

இது குறித்த ஊடகச் செய்தியின் அடிப்படையில் ஆணையம் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளதாக வெளியிடப்பட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வேலைவாய்ப்பு என்ற பெயரில் பாதிக்கப்பட்ட சிறுமி உள்பட 4 சிறுமிகள் உத்தரப்பிரதேசத்துக்கு கடத்திச் செல்லப்பட்டதாக கூறப்படுகிறது. உள்ளூர் வழக்கறிஞர் ஒருவரின் உதவியுடன் சிறுமி தப்பித்து, ஜான்சி காவல் நிலையத்தை அணுகினார் என அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அவரது வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டபோதும், ஒடிசாவுக்கு ரயில் டிக்கெட் வழங்கியது தவிர, காவல்துறை வேறு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என குற்றம் சாட்டப்பட்டுள்ளது. சிறுமி ஊர் திரும்பிய பின், ஒடிசா காவல்துறை அவரது வாக்குமூலத்தை பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஊடகச் செய்தியில் கூறப்பட்டுள்ள தகவல்கள் உண்மையானால், அவை கடுமையான மனித உரிமை மீறல்களை சுட்டிக்காட்டுவதாக ஆணையம் குறிப்பிட்டுள்ளது.

இதையடுத்து, ஒடிசா காவல்துறை தலைவர், உத்தரப்பிரதேச காவல்துறை தலைவர் மற்றும் டெங்கானல் மாவட்ட ஆட்சியர் ஆகியோருக்கு நோட்டீஸ் அனுப்பி, இரண்டு வாரங்களுக்குள் விரிவான அறிக்கை தாக்கல் செய்ய தேசிய மனித உரிமைகள் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

Hindusthan Samachar / vidya.b